Sunday, August 20, 2017


டெங்கி காய்ச்சல் எப்படி பரவுகிறது? டெங்கி காய்ச்சலை உண்டு பண்ணும் வைரசை டெங்கி வைரஸ் என்பார்கள். இதில் நான்கு வகைகள் உண்டு. இது பிளேவி வைரஸ் வகைகளை சார்ந்தது. இந்த வைரசுகள் ஆசிய புலிக்கொசு (ஏடிஸ் அல்போபிக்டஸ்), மற்றும் ஏடிஸ் இஜிப்திஐ என்ற கொசுக்களினால் பரவுகிறது. இந்த கொசுக்கள் மனிதர்கள் உபயோகப்படுத்தும் பொருட்களில் (தண்ணீர்த்தொட்டிகள், பாத்திரங்கள், டயர்கள், உடைந்த குடங்கள் மற்றும் பல...) உள்ள நன்னீரில் இனப்பெருக்கம் செய்பவை. டெங்கி என்ன தான் செய்யும்? கொசுக்களால் இந்த வைரசுகள் நம் ரத்த நாளங்களில் செலுத்தப்படும். செலுத்திய ஒரு வாரத்திற்குப்பின் தான் நோய்க்கான அறிகுறிகள் தென்படும். உடலில் வலி, மூட்டு வலி, காய்ச்சல், விழி வட்டத்தில் வலி (கண் தெறிப்பது போல் வலிக்கும்) ஏற்படும். சில சமயம் வாந்தி, குமட்டல், தோலில் புண் என்று கொஞ்சம் கொஞ்சமாக அறிகுறிகள் அதிகரிக்கும். நோய் வந்த முதல் கட்டத்தில் டெங்கி காய்ச்சல் ஏற்படும். வைரசுகள் நம் உடலில் பெருகப்பெருக நோயின் தீவிரம் அதிகரிக்கும். இது இரண்டாம் நிலை. இந்த காய்ச்சலுக்கு டெங்கி ரத்தப்போக்கு காய்ச்சல் என்று பெயர். விழித்திரையிலிருந்து ரத்தம் வரலாம், தோலில் உள்ள புண்களிளிருந்து ரத்தம் கசியலாம். அடுத்து மிகவும் கொடூரமான மூன்றாம் நிலை டெங்கி சாக் சிண்ட்ரோம். இது நிச்சயமாக உயிரைப் பறித்துவிடும். நாம் என்ன செய்ய வேண்டும்? நம் சுற்றுப்புறங்களில் தேங்கிய நீர் இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இது எப்படி சாத்தியம்? பரவலான விழிப்புணர்வும், மக்களின், தொண்டு நிறுவனங்களின், அறிவியல் இயக்கங்களின் பங்கு மிக அவசியம். விரிவாக எடுத்துச் செல்லும் பட்சத்தில் நோயை அடுத்த கட்டத்திற்கு செல்லாதவாறு தடுத்து விடலாம். நோய் முற்றினால் காப்பாற்றுவது கடினம். உண்மையில் டெங்கி ஆட்க்கொல்லி நோயல்ல. பெரும்பாலும் குழந்தைகள் தான் பாதிக்கப் படுகிறார்கள். முதியோர்களும் அடக்கம். ஏதாவது தடுப்பு ஊசி உள்ளதா? இன்று வரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஏராளமான ஆராய்ச்சிகள் நடந்து கொண்டே தான் இருக்கிறது. விரைவில் கண்டுபிடித்துவிடுவார்கள் என நம்புவோம். வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட மருந்துகள் கிடைக்கின்றன. இறக்குமதி செய்யவேண்டும். இந்தியாவில் மட்டும் தான் இந்த அச்சுறுத்தலா? வெப்ப மண்டல நாடுகளில் தான் இந்த கொசுக்களின் தாக்கமும், வைரசுகளின் தாக்கமும் அதிகம். நம்மை விட தாய்லாந்துக்காரர்கள் அதிகம் சிரமப்படுகிறார்கள். இலங்கையிலும், சீனாவிலும் இவ்வகை கொசுககள் உள்ளன. அதனால் சர்வதேச முக்கியத்துவம் உண்டு. இந்த கொசுக்களை அழிக்கவே முடியாதா? நாம் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். பரிணாமத்தில் நாமெல்லாம் நேற்று வந்தவர்கள். கொசுக்கள் எல்லாம் நம்மைவிட லட்சக்கணக்கான வருடங்களுக்கு முன்னரே பரிணமித்துவிட்டன. நாம் தான் எத்தனை எத்தனை கொசுவிரட்டிகளை (கவனிக்கவும் கொசுவிரட்டி - கொசுக்கொல்லி அல்ல) சந்தித்து விட்டோம். இதன் பயன் கொசுக்களின் சிற்றினங்களிலேயே பல வகைகள் மரபணு மாற்றத்தின் விளைவாக தோன்றி விட்டன. எல்லாவிதமான வேதிக் கொல்லிகளையும் எதிர்கொள்ளும் திறனை இந்த கொசுக்கள் பெற்றுவிட்டது. லார்வாக்களை மட்டுமே அழிக்க முடியும். அதுவும் நீரில் வாழ்வதால் அவை பறந்து தப்பித்துச் செல்ல வாய்ப்பில்லை லார்வாக்களின் வாழ்விடத்தை அழித்தாலே இந்த நோயின் தீவிரத்தைக் குறைக்கலாம். என்ன தான் செய்கிறார்கள் இந்த விஞ்ஞானிகள்? தொழில்நுட்பத்தை பயன்படுத்தி லார்வாக்களின் உண்ணும் திறனை அழித்துவிட முடியும் என்கிறார்கள். மரபு மாற்றம் செய்யப்பட்ட கொசுக்களை பொது இடங்களில் பறக்க விட்டு அவற்றை இயற்கையான கொசு இனங்களோடு கலவி செய்து அவைகளை மலடாக்கலாம் என்று எத்தனையோ திட்டங்கள் வைத்திருக்கிறார்கள். ஆனால் சுற்றுச் சூழலில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டு நமக்கே வினையாகப் போய்விட்டால் என்ன செய்வது என்ற குழப்பமும் உள்ளது. தடுப்பு ஊசி தயாரிப்பதில் முனைப்போடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். சாதிப்பார்கள் என நம்புவோம்.

விலங்கியல் பாடத்தில் விலங்குகளைப்பற்றிப்படிப்பது வெகுவாக்க்குறைந்துவிட்டது. இது மிகுந்த வருத்தத்தையும் வலியையும் கொடுக்கிறது. பத்திரிக்கைகளில் கூட விலங்கியல் ஆசிரியர்களிடம் கேட்டு பிரசுரிப்பவர்களும் அரிதாகிப்போய்விட்டனர். நேற்று ஒரு கல்லூரிக்கு நிரந்தர பணியிடத்தில் பணிபுரிவதற்கான நேர்முகத்தேர்விற்கு துறை வல்லுனராக அழைத்திருந்தார்கள். அதில் கேட்ட கேள்வி இது தான்! முழுக்க முழுக்க கடலில் மட்டுமே வாழக்கூடிய தொகுதி எது? ஒருவர் கூட பதில் சொல்லவில்லை. நேநோ தொழில்நுட்பம், புரொபயாட்டிக்ஸ், புரோட்டியோமிக்ஸ் என்ற வார்த்தைகளைப்பயன்படுத்தும் அளவிற்கு புராதன விலங்கினப்பெயர்கள் குறித்து அறிந்தாரில்லை. விசனப்படுகிறேன். ரொம்பவும் டெக்னிக்கலாகச்சொல்லி உங்களை குழப்பவிரும்பவில்லை. முதுகெலும்பற்றவைகளில் முட்தோலிகள் என்று தமிழில் அழைக்கப்படும் Echinodermata தொகுதியிலுள்ள அனைத்து சிற்றினங்களுமே கடலில் மட்டுமே வாழக்கூடியவை. குறிப்பாக கடலின் தரைப்பரப்பில்! டெக்னிக்கலாக benthic உயிரிகள். எளிமையான உதாரணங்களாக sea urchin எனப்படும் கடல் குச்சி, கடல் அல்லி, நட்சத்திர மீன், கடல் வெள்ளரி என்று குறிப்பிட்டால் அறிந்துகொள்வீர்கள் தானே! வண்ணமயமான தொகுதிகளில் இதுவும் ஒன்றே! இன்னொரு விசேசமும் உண்டு. இவற்றைக்கொல்வது கடினம்! ஏனென்றால் இவை மீண்டு வளரும் தன்மை படைத்தவை, அதாவது regeneration திறன் கொண்டவை. செய்தித்தாள்களில் படித்திருப்பீர்கள் உணவுக்காகவும, அணிகலன்களுக்காகவும் அதிகம் கொல்லப்படுபவையும் இவை தான். தரைக்குக்கொண்டு வந்தால் கொன்றுவிடமுடியும். அதன் வாழிடத்தில் சாத்தியமில்லை என்று பொருள் கொள்ளவும். கடல் குச்சிகளின் இனப்பெருக்க மண்டலம் (ரொம்பச்சரியாகவெனில் கொனாடுகள்) அவ்வளவு ருசியாக இருக்கும் என்பதற்காகவே அதிக அளவு கொல்லப்படுகிறது. கடல் வெள்ளரிகளை உலர்த்தி சுருங்கிய பின் அணிகலன்களாக அணிந்துகொள்பவர்களும் உண்டு. ஒரு விசயத்தில் நட்சத்திர மீன்களை மனிதர்கள் எதிரிகளாகப்பார்க்கிறார்கள் காரணம் இவை முத்துச்சிப்பிகளை அல்லது முத்துக்கள் உருவாக்கும் சிப்பிகளைக்கொல்வதால். இன்னுமொரு விசேடம் என்னவென்றால் இவைகளுக்குத்தலையும் கிடையாது.

படத்தில் வரும் சமுத்திரக்கனி மாதிரி வாத்தியார் சாத்தியமா? வாத்தியாரை மாணவர்களுக்குப்பிடிக்கும் தான்! என் அனுபவத்தில் (இங்கே கல்லூரி மாணவர்கள் எனப்பொருள் கொள்க) அனைவருக்கும் பிடிக்குமென்பது சாத்தியமேயில்லை. ஒரு சிலருக்கு இருக்கலாம். அப்படியேயிருந்தாலும் அதை வெளிப்படுத்தும் திறன் ஒரு சிலருக்கே வாய்க்கும். பணிவிடை வாழ்த்தியல் விழாக்களில் கூட சில மாணவர்கள் பாராட்டிப்பேசக்கூடும். ஆனால் அத்தனையும் உண்மை என்பதில் எனக்கு இரு வேறு கருத்துக்கள் உண்டு. முன்னர் போல இல்லை. ஆசிரியர் பணி ஓய்வு பெறும் போது வரும் பழைய மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாக்க்குறைந்துவிட்டது. தமிழாசிரியர்களுக்கே இந்தக்கதி தான் எனும் போது பிற துறை ஆசிரியர்களின் நிலை குறித்துக்கேட்கவே வேண்டாம். கிட்டத்தட்ட நிரந்தரப்பணி மேற்கொண்ட என் பதினேழு வருட அனுபவத்தில் ஒரு சில ஆசிரியர்களுக்கு சம்பிரதாயமாக விழா எடுத்திருக்கிறார்களேயன்றி பெரிதாகவெல்லாம் ஒன்னுமில்லை. என் மூளையில் பதிவான ஒரு நிகழ்வு இன்று வரை நினைவில் நிழலாடிக்கொண்டேயிருக்கிறது. ஒரு மாலை வேளை. அன்று ஒரு கணிதப்பேராசிரியர் ஓய்வு பெறுகிறார். பொதுவாக மே 31 ஆம் தேதி தான் பணி நிறைவு பெறுவார்கள். பொறுப்பை ஒப்படைக்கும்விதமாக அவர் கல்லூரிக்கு வந்திருந்தார். செமஸ்டர் விடுமுறையாதலால் ஒரு சிலரே வந்திருந்தார்கள். முதல்வர் கண்டிப்பாக இருப்பார். அங்கிருக்கும் ஒரு சிலர் அவரை முதல்வர் அறைக்கு அழைத்து சின்னதாக சிறப்புச்செய்து நின்று விடுவர். பின் அவர் தனியாகச்சென்றுவிடுவதே வழக்கமாய் இருக்கும். விதிவிலக்குகள் உண்டென்றாலும், இயல்பாய் நடப்பது அப்படியே. பெரும்பாலும் சாயுங்கால வேளையாயிருக்கும். அப்படியான தருணங்களில் தான் அவரைக்கண்ணுற்றேன். தனியாக தனது பையை எடுத்து சென்றுகொண்டிருந்தார். போகும் போது செக்யூரிட்டியிடம் ஏதோ சொன்னார். அவர்கள் பெரிதும் அலட்டிக்கொண்டதாய் தெரியவில்லை. அவர்கள் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்பவர்கள். ஆதலால் பெரிதாய் ஒன்றும் பரிச்சயமிருக்காது. அந்த வேளையில் தான் பரமசிவம் என்ற இளைஞன் வந்தான் (இப்போது அவன் உயிருடனில்லை!) அவனிடமும் அந்தபேராசிரியர் சொல்லியிருப்பார் போல சடாரென எதுவும் யோசிக்காமல் காலில் விழுந்தான். அவன் படித்திருக்கவில்லை. தனது கல்லூரியில் பணியிலிருக்கும் பேராசிரியர் என்ற அளவில் மட்டுமே தெரிந்திருப்பான். சில வேளைகளில் அவர் அவனுக்கு சிறிதளவு பணம் கொடுத்திருக்கலாம் அல்லது இல்லாதுமிருக்கலாம். இத்தனைக்கும் அவன் கடைநிலை ஊழியன். சமயங்களில் மலக்குழிகளில் இறங்கி சுத்தம் செய்வதையும் பார்த்திருக்கிறேன். அவன் மட்டுமே அதைச்செய்தான். அப்பேராசிரியர் பதறியடித்து அவனை எழச்செய்து கைகுழுக்கி மெல்ல விடைபெற்று பேருந்து நிறுத்தம் சென்றார். அவரின் முப்பது வருட பணிவாய்ப்பில் ஒருவர் கூடவா அவரை வீடு வரை கொண்டு செல்லும் நண்பரைப்பெறாமலிருந்திருப்பார்? எத்தனை மாணவர்கள் அவரிடம் பயின்றிருப்பர்? ஒருவருக்குக்கூடவா அவரை வீடு வரை கொண்டு விடும் எண்ணமில்லை! அவர் அன்று என்ன நினைத்திருப்பார்? எப்படித்தூங்கியிருப்பார்? அவர் துறை சார்ந்த பேராசிரியர்கள் குறித்து என்ன நினைத்திருப்பார்? நானும் அவரை வழியனுப்பினேன் தான்! அவருடனான எனது பழக்கம் வெகு குறைவே! ஆனால் என்னவோ நான் அவர் போகும் வரை பார்த்துக்கொண்டிருந்தேன்! மற்ற அலுவலகங்களில் பணிநிறைவு பெறும் போது கூட இவ்வாறு நிகழ்வதில்லை? ஏன் இவர்களுக்கு மட்டும் இப்படி?

Wednesday, November 19, 2014


மதங்களின் பெயரால்.......! கொல்லப்படும் யானைகள்! பிலிப்பின்ஸ் நாட்டில் குழந்தை இயேசு மற்றும் கத்தோலிக்க பாதிரிமார்களின் சிலைகள் செய்வதற்கும், எகிப்தில் முஸ்லீம்களின் தொழுகை பாசிகளும், கிறித்துவச் சிலைகள் செய்வதற்கும், சீனா மற்றும் தாய்லாந்தில் புத்த சிலைகள் செய்வதற்கும் பயன்படுத்தப்படும் தந்தங்களுக்காக ஆப்ரிக்க யானைகள் பெருமளவு கொல்லப்படுகின்றன. 2011 ஆம் ஆண்டில் மட்டும், சுமார் 25,000 யானைகள் தந்தங்களுக்காக கொல்லப்பட்டிருப்பதாக யானைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தரவுகள் கூறுகின்றன. பிலிப்பின்சிலிருந்து அமெரிக்காவிற்கு குழந்தை இயேசு சிலைகள் எவ்வாறு கடத்தப்படுகிறது தெரியுமா? கிழிந்த, அழுக்கடைந்த உள்ளாடைகளில், தந்தத்தால் செய்யப்பட்ட குழந்தை இயேசு சிலைகள் சுற்றப்பட்டு, அதன் மேலே தக்காளி சாஸ் கொட்டப்பட்டு, பிசுபிசுப்புடன், அருவருக்கத்தக்க வகையில் கடத்தப்படுகிறது என்கிறார் நேஷனல் ஜியோகிராபி பத்திரிக்கையின் நிருபர் பிரைன் க்ரிஷ்டி. யானைத்தந்தங்களால் செய்யப்பட்ட மதச்சின்ன சந்தைகளுக்கான தலைநகர் பிலிப்பைன்ஸ் நாடு தான்! தந்தங்கள் கெட்ட ஆவிகளை துரத்துகிறதாம்! இதுதான் அவர்கள் நம்பும் மிகப்பெரிய மூடநம்பிக்கை! அதற்காகவே இந்தக் கொடூரங்கள் அரங்கேறுகின்றன! சீனாவில் மட்டும், தந்தங்களாலான புத்த மற்றும் டாவோயிஸ்ட் கடவுள் சிலைகள் மட்டும் ஈட்டுத்தந்த வருமானம் அமெரிக்க மதிப்பில் 215,000 டாலர்களாம். இது வெறும் டிரைலர் தான்! மெயின் பிக்சர் என்னவெல்லாம் சொல்லும்னு தெரியாது! கருணை பொங்கும் புத்தர் சிலைகளும், கருணையே வடிவான மடோனா சிலைகளும், கருப்பிடிப்புக்கடவுளர்களும் இதில் அடங்கும்! உலகின் முதன்மை மதங்கள் என்பதால் இது குறித்து ஏராளமான தகவல்கள் மண்டிக்கிடக்கின்றன. தந்தங்களால் செய்யப்பட்ட இந்துக்கடவுள்கள் பற்றி ஆழ்ந்த ஆய்வுகள் தெரியப்படுத்தலாம்! இங்கேயும் மூடநம்பிக்கைகளுக்குக் குறைவில்லையே! இயேசுவின் விழிகளில் ரத்தம் கசிவது, தொழும்போது கைகளில் உணரும் பிசுபிசுப்பு ஒருவேளை யானைகளின் ரத்தமாய் இருக்குமோ? ஆமென்!

மரபணுக்களை நகலெடுக்கும் வல்லமை 90% தாவரங்களுக்கு இருப்பதாக இலினாய்ஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகளான பெய்ஜ் மற்றும் ஸ்கோல்ஷ் கண்டுபிடித்துள்ளார்கள். கடுகு குடும்பத்தை சேர்ந்த அராபிடாப்சிஸ் தாலியானா என்ற தாவரத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் மூலம் இதை நிரூபித்திருக்கிறார்கள்.
ஏதேனும் ஆடு, மாடுகள் தாவரங்களை உண்ணும்போது சேதமடையும். அந்த சமயத்தில் இயல்பைவிட வீரியத்துடன் நகலெடுக்கும் வல்லமையைப்பெற்றுவிடுவதால் இத்தாவரங்கள் இழந்த பகுதி மீட்டெடுக்கப்பட்டுவிடுவதாக தங்களது ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளார்கள். இந்தத்தாவரத்தின் மரபணுக்களைத்தான் முதன்முதலில் வரிசைப்படுத்தினார்கள். மரபணுக்கள் ஆராய்ச்சியில் இத்தாவரத்திற்கு மிகவும் முக்கியமான பங்குண்டு

Sunday, November 16, 2014


திருநங்கைத்தன்மையை குரோமோசோம்கள் நிர்ணயிக்கிறதா? 1955 ல் முனைவர் ஜான் மணி என்பவர் தான் பாலினம் என்ற வார்த்தையை முதன்முதலில் பயன்படுத்தினார். அடுத்து ஜான் ஹோப்கின்ஸ் பாலின அடையாளம் என்ற பதத்தை பயன்படுத்தினார். முன்பெல்லாம் இனப்பெருக்க உறுப்புகளை வைத்தே பாலினம் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் சமீபத்திய ஆய்வுகள் அது சரியல்ல என்கிறது. ஒரே நபரிடம் ஆண்தன்மையும் பெண்தன்மையும் இருக்கலாம்! வெளிப்படுத்துவதில்தான் வேற்றுமை இருக்கிறது என்கிறார்கள். மனிதர்களுக்கு மொத்தம் 46 குரோமோசோம்கள். அதில் 44 குரோமோசோம்கள் உடல் வளர்ச்சியையும் 2 குரோமோசோம்கள் (அதாவது X மற்றும் Y) பாலினத்தையும் நிர்ணயிக்கும் XX என்று இருந்தால் அது பெண் என்றும் XY என்று இருந்தால் அது ஆண் என்றும் பழைய மரபியல் கூற்றுகளின்படி நம்பப்பட்டு வந்தது. இவை தவிர XXY, XYY மற்றும் XO என்ற வகைகளும் உண்டு. இதில் XXY மற்றும் XYY வகையினருக்கு மொத்தம் 47 குரோமோசோம்கள். XO க்கு வெறும் 45 குரோமோசோம்களே! இவை மூன்றுமே syndrome எனும் நோய்க்குறித்தொகுப்பில் அடங்குவர்! பொதுவாக இவர்கள் மனவளர்ச்சிக் குறைபாடு கொண்டவர்கள். இந்த வகையினரையும் திருநங்கைகளையும் ஒப்பிடக்கூடாது. XYY வகை குரோமோசோம்கள் கொண்டவர்கள் க்ளைன்பெல்டெர் நோய்க்குறித்தொகுப்பால் பாதிக்கப்பட்டவர். 500 பிறப்பில் ஒன்று இது மாதிரி நிகழலாம். மலட்டுத்தன்மை வாய்ந்தவர்கள். பெரிய மார்பகம் இருக்கும். விரையும், விரைக்கொட்டையும் அளவில் மிகச்சிறியதாய் இருக்கும். அந்த விசயத்தில் சிறிதளவே நாட்டம் இருக்கும். இவர்கள் திருநங்கைகள் அல்லர். XYY வகையினர் பார்ப்பதற்கு ஆண்தன்மையுடன் தான் இருப்பார்கள். ஆனால் நடத்தை பாதிக்கப்பட்டிருக்கும். இவங்க மோசமானவங்க. இருபாலினத்தவரோடும் பலான உறவு வைத்துக்கொள்ள விரும்புபவர்கள். குழந்தைகளுடன் முறைகேடாக நடந்துகொள்வார்கள் (PAEDOPHILIACS). முறைசாராக்கலவியில் (கல்வியல்ல) ஈடுபடுபவர்கள். அந்த விசயத்தில் கொலையும் செய்யத்தயங்காதவர்களாய் இருக்க வாய்ப்புண்டு. இவர்களும் திருநங்கைகள் அல்லர். ஆனால் XO வகையினருக்கு இனப்பெருக்க உறுப்புகள் வளர வாய்ப்பேயில்லை. எந்த இனப்பெருக்க ஹோர்மோன்களும் உற்பத்தியாகாது. இவர்களும் திருநங்கைகள் அல்லர்! ஆகவே குரோமோசோம்களின் வகைகளுக்கும் திருநங்கைகளுக்கும் சம்பந்தமில்லை! பின் எப்படி? பாலினம் கருவில் நிர்ணயிக்கப்படுகிறது. டெஸ்டொஸ்டீரோன் ஹார்மோன்களின் அளவைப் பொறுத்தே பாலினம் நிர்ணயிக்கப்படுகிறது. டெஸ்டொஸ்டீரோன் சுரந்தா ஆணாகவும், சுரந்தாலும், சுரக்காவிட்டாலும் பெண்ணாகவும் நிர்ணயிக்கப்படும். Y குரோமோசோமிலுள்ள SRY என்ற மரபணுதான் பாலினப்புறத்தோற்றத்தை நிர்ணயிக்கிறது. ஆணென்றால் ஆணுக்கானது, பெண்ணென்றால் பெண்ணுக்கானது. இந்த SRY மரபணு Y குரோமோசோமின் குட்டைக்கையில் மட்டும் தான் இருக்கும். X குரோமோசோமில் இருக்காது. Y குரோமோசோமில் SRY மரபணு இல்லையென்றால் XY என்ற ஆண்களுக்கான குரோமோசோம்கள் இருந்தாலும்கூட அவர் பெண்தான்! அதேபோல SRY மரபணு தவறி X குரோமோசோமுடன் ஒட்டியிருக்கும்பட்சத்தில் XX என்ற பெண்களுக்கான குரோமோசோம்கள் இருப்பினும் கூட அவர் ஆண் தான்! கருவில் வளரும் குழந்தையில் SRY மரபணு, விரைகளைத் தீர்மானிக்கும் காரணி என்ற புரதத்தைச் சுரக்கும். அதன் காரணமாக, சரியாக மாறுபாடு அடையாத GONAD விரைகளாக (டெஸ்டெஸ்) மாறுபாடு அடையும். அவ்வாறு நிகழும்போது அவை ஆண் ஹார்மோன்களான டெஸ்டொஸ்டீரோனையும், டிஹைட்ரோகார்டிகோஸ்டீரோனையும், எதிர் முல்லேரியன் ஹார்மோனையும் சுரக்கும். ஆண் மற்றும் பெண் இனப்பெருக்க உறுப்புகளின் வளர்ச்சியைத் தீர்மானிப்பது இந்த TDF (TESTES DETERMINING FACTOR) எனும் விரைகளைத் தீர்மானிக்கும் காரணி தான்! இதன் காரணமாக டெஸ்டொஸ்டீரோன் சுரந்தா ஆணாகவும், சுரந்தாலும், சுரக்காவிட்டாலும் பெண்ணாகவும் இனப்பெருக்க உறுப்புகள் கருவில் வளரும். இரண்டு முக்கியமான குறைபாடுகளாக CONGENITAL ADRENAL HYPERPLASIA வையும், ANDROGEN INSENSITIVITY SYNDROME யும் குறிப்பிடுகிறார்கள். முதல் வகையான CONGENITAL ADRENAL HYPERPLASIA வில் பெண் சிசுக்கருவில் அட்ரினல் சுரப்பி ஸ்டீராய்டு ஹார்மோன்களை சுரக்கும்பட்சத்தில் அது டெஸ்டொஸ்டீரோனை ஒத்த ஹார்மொனாகையால் குழம்பிய ஆண் - பெண் இனப்பெருக்க உறுப்புக்கலவையாக உருப்பெற்றுவிடும். இதை கருவிலேயே கண்டறியும்பட்சத்தில் சரிசெய்ய வாய்ப்புள்ளது. பெண் - பெண் உறவாளர்களாக (லெஸ்பியன்) மாறிவிடும் சாத்தியமும், திருநங்கைகளாக மாறிவிடும் சாத்தியமும் ஐம்பதுக்கு ஐம்பது! இரண்டாவது வகையான ANDROGEN INSENSITIVITY SYNDROME வில் டெஸ்டொஸ்டீரோன் அளவு சரியாக இருந்தாலும் அதை உணரும் வாய்ப்புகள் சார்ந்த உறுப்புகளுக்கு இல்லையெனில் பெண்ணாக உருப்பெற்றுவிடும். ஆனால் இவ்வகைப்பெண்கள் பருவவயதை அடையும்போது பூப்பெய்வதில்லை! ஆனால் இத்துறைசார்வல்லுநர்கள் உடல்ரீதியான பாலினமும், மூளை(BRAIN)ரீதியான பாலினமும் வேறுவேறு என்கிறார்கள். ஆண்தன்மை கொண்ட மூளை, பெண்தன்மை கொண்ட மூளை என்று இருக்கிறதாம். ஒருவரின் நடத்தையைக்கொண்டு அறியலாமாம். உடல்ரீதியாக ஆணாக இருப்பவர்களுக்கு பெண் மூளைத்தன்மை இருக்கலாம். அதேபோல உடல்ரீதியாக பெண்ணாக இருப்பவர்களுக்கு ஆண்மூளைத்தன்மை இருக்கலாம். எனவே திருநங்கைத்தன்மையை தீர்மானிக்கும் காரணிகள் பல்வேறு இருக்கலாம். குறிப்பாக SRY மரபணுவும், மூளைப்பாலினமும் அதன் தாக்கமுமே திருநங்கைகள் உருவாகக்காரணமாய் அமையலாம். குரோமோசோம்களின் எண்ணிக்கையோ XY அல்லது XX ஸோ அல்ல என்கிறது சமீபத்திய ஆய்வுகள். இனி வருங்காலங்களில் அன்றாட வாழ்க்கையில் கூட மரபணு ஆய்வுகள் முக்கியப் பங்காற்றப்போகின்றன. மருத்துவமனைகளில் அதுவும் குறிப்பாக மகப்பேறு மருத்துவமனைகளில் இதற்கென தனிப்பிரிவு உண்டாக்கப்படவேண்டும்!!! செய்வார்களா?

Sunday, May 19, 2013


சர்வதேச தண்ணீர் தினம் - மார்ச் 22 சர்வதேச தண்ணீர் கூட்டுறவு ஆண்டு 2013 இந்த பிரபஞ்சத்திலுள்ள அனைத்து கிரகங்களையும் விட பூமிக்கு இவ்வளவு முக்கியத்துவம் கிடைத்ததற்கு காரணம் அதில் கிடைக்கக் கூடிய தண்ணீர். அனைத்து உயிர்களுக்கும் ஆதாரமானது இந்த தண்ணீர்.ஒவ்வொரு உயிரினமும் சுமார் 70 சதவீதம் தண்ணீராலானது. முன்னெப்போதையும் விட இந் நூற்றாண்டில் தான் நீரின் மகத்துவம் குறித்த தௌவு அதிகமாகியிருக்கிறது. பன்னெடுங்காலமாகவே நீரை ஆற்றலுக்காகவும், போக்குவரத்திற்காகவும், பாசனத்திற் காகவும் மனிதன் பயன்படுத்தி வந்திருக்கிறான். நீர் நம் ஆதாரத் தேவை. இந்த உலகின் பல்வேறு நாகரீகங்கள் ஆற்றங்கரையிலிருந்து தான் தோன்றியிருக் கிறது. திட, திரவ மற்றும் வாயு நிலையில் இருக்கும் ஒரே வேதிப் பொருள் தண்ணீர் தான். அதற்கென தனி நிறமோ, சுவையோ, பணமோ கிடையாது. இவ்வளவு ஏன்? உலகின் முதல் உயிரினம் நீரில் தான் தோன்றியதாக பரினாமவியலாளர்கள் கூறுகிறார்கள். இவ்வளவு சிறப்புகள் கொண்ட தண்ணீர் அதன் புனிதத் தன்மையோடு இருக்கிறதா? தண்ணீரைப் பழித்தவனை தாயைப் பழித்தவனுக்கு இணையாகச் சொல்கிறோமே! ஏன்! இவ்வளவு உணர்ந்தும் நாம் தண்ணீர் வளங்களை பாதுகாக்கிறோமா? நாடோடி வாழ்க்கை வாழ்ந்த மனிதன் ஓரிடத்தில் நிலைத்து வாழ ஆரம்பித்ததற்கு காரணம் உழவுத் தொழிலும் அதனைச் செயலாக்கும் வற்றாத நதிகளும் தான். ஆற்றுப் படுகைகளல் தான் தங்கள் வாழ்வை தொடங்க ஆரம்பித்தார்கள். பெரும்பாலான நாகரீகங்கள் ஆற்றங்கரைகளில் தான் தொடங்கியிருக்கிறது. வாழ்க்கை நம் பிறப்பிலிருந்து இறப்பு வரை தண்ணீர் துறை பார்த்தே இருக்கிறது. தண்ணீர் நம் உயிரிலும் சரி, உடலிலும் சரி பிரதான பங்கை வகிக்கிறது. மக்கள் தொகைப் பெருக்கம், நாகரீக வளர்ச்சி, தொழிற்புரட்சி, பசுமைப் புரட்சி, வெண்மைப் புரட்சி, நீலரப் புரட்சி சிவப்புப் புரட்சி, பழுப்பு புரட்சி என்று பலவகை புரட்சிகளுக்குப் பிறகு தண்ணீர் மாசுபட ஆரம்பித்துவிட்டது. இன்று சுத்தமான நீர் கிடைப்பது அரிதாகி விட்டது. வருடந்தோறும் நீரினால் ஏற்படும் நோய்களில் லட்சக்கணக்கான மக்கள் இறக்கிறார்கள் குறிப்பாக, வயிற்றுப்போக்கின் மூலம். "நீரின்றி அமையா ஆக்கைக்கெல்லாம் " என்று புற நாணுற்றுப் பாடலுண்டு. மனசில ஈரம் இருந்தா இப்படி பேசுவியா? நீரை வணங்குவது, நதிகளைப் போற்றுவது என கலாச்சார ரீதியாகவும் நீருக்கு முக்கித்துவம் கொடுத்துருக் கொண்டேதான் வந்திருக்கிறோம். புவியின் மொத்த நீர் அளவினைக் கணக்கிட்டால், 200,000,000 சதுர மைல் பரப்பில், கிட்டத்தட்ட 97 சதவீதம் உப்பு நீர்தான். மீதமுள்ள 3சதவீதத்தில் தான் நன்நீர் உள்ளது. அதில் 2.2 சதவீதம் ஆறுள், குளங்கள், ஏரிகள், நதிகள் போன்ற நீர்நிலைகளாகவும், சுமார் 0.5 சதவீதம் நிலத்தடி நீராகவும் உள்ளது. இவ்வளவு குறைந்தநீரை அதன் வளம் குறையாமல் வைத்திருக்கிறோமா? பெருகி வரும் மாசுக்களிடமிருந்தும், புவி வெப்பமயத்திலிருந்தும் எப்படி தக்க வைத்துக்கொள்ளப் போகிறோம்! நைல்நதி பாயாவிட்டால் எகிப்தும் பாலைவனமாகி இருக்கும் என்ற சொல் வழக்கு உண்டு. நீர் அளவு குறைந்தால் என்ன ஆகும? வற்றிய ஏரிகள், குளங்கள், மணலோடும் நதிகள்இ சாக்கடை ஓடிய ஆறுகள் நம் எதிர்காலம் எதை நோக்கிப் போகிறது? பாலாறும்இ தேனாறும் பாயவே பாயாதா? ஏராளமான குழப்பத்தோடும் நீரைக்காக்க போதுமான முன் நடவடிக்கைகளும், திட்டங்களும் இல்லாமல் எதிர்கால சந்ததியிருக்கு நல வாழ்வு சாத்தியமா? உறவை அறுத்துக்கொள்ள வேண்டுமானால் இன்றும் தண்ணீரை வைத்துத்தான் முடிவு செய்கிறார்கள் இந்தியாவில். தறுதலையாய் திரியும் மகனை வெறுக்கும் அப்பா கூட தண்ணி தெளித்து விட்டாயிற்று என்றே ஆத்திரப்படுகிறார். ஏன் தண்ணீரை வெறுப்பேற்றும் செயலுக்கு ஒப்பிடுகிறார்கள். என்றே புரிவதல்லை. கிட்டத்தட்ட உலகின் ஐம்பெருங்கண்டங்களிலுள்ள சுமார் 50 நாடுகள் தண்ணீருக்காக சண்டையிட்டுக் கொள்கிறார்கள் என்று ஆய்வு கூறுகிறது. பெரும்பாலான சண்டைகள் அணைத் தேக்கங்களுக்காகவும், நதிகளுக்காகவும், நிலத்தடி நீருக்காகவும் நடக்கிறது என்கிறார்கள். தண்ணீருக்கென தனி ஒரு அரசியலே நடந்து கொண்டிருக்கிறது. சாட், எமன் மற்றும் சோமாலியா போன்ற நாடுகளின் சண்டை பெரும்பாலும் தண்ணீர் பங்கீடுகளுக்காகவே நடந்தேறியிருக்கிறது. கென்யாவின் தானா ஆற்றுப்படுகை மாவட்டத்தில் மட்டும் தண்ணீரின் காரணமாக ஏற்பட்ட தகறாரில் பழிவாங்கும் முகமாக 8 குழந்தைகள்இ 16 ஆண்கள் 9 போலீஸ் அதிகாரிகள் சென்ற ஆண்டில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். கடலில் மீன் பிடிப்பதில் ஆரம்பித்து, நதி நீர் பங்கீடு, நிலத்தடி நீர் என்று எங்கு பார்த்தாலும் தண்ணீர் சார்ந்த சண்டைகள், ஆப்ரிக்காவின் நைல் நதிச் சண்டையிலிருந்து, பிரம்மபுத்திரா தொடங்கி, காவிரி, கிருஷ்ணா, முல்லைப் பெரியாறு என்று எதையெடுத்தாலும் பிரச்சனை. அதனால் உருவாக்கும் அரசியல் சண்டை இவற்றிற்கு முடிவே கிடையாதா? நாமெல்லாம் ஒத்துப்போக வேண்டும். விட்டுப்கொடுக்க வேண்டும். அதன் முகமாகவே இந்த ஆண்டை தண்ணீர் கூட்டுறவிற்கான சர்வதேச ஆண்டாக அறிவித்திருக்கிறது ஐ.நா.சபை. புவி வெப்பமடைதலுக்கான அனைத்து காரணிகளாலும் பருவமழை பொய்த்து விட்டது. பருவமழை பொய்த்து விடுதலால் நாட்டின் உணவு உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நதி நீர் பங்கீடு குறித்த தெளிவான புரிதல் நாடுகளுக்கிடையேயும், தேசத்தின் மாநிலங்களுக்கிடையேயும் ஏற்படுத்தக் கூடிய அமைப்பு தேவையாயிருக்கிறது. அதற்காகத்தான் ஐக்கிய நாடுகள் சபை சில விஷயங்களை முன்னெடுத்துச் செல்கிறது அதன் ஒரு பகுதியாக சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்சனைகள்குறித்த விழிப்புணர்வை பல்வேறு நாடுகளுக்கு எடுத்துச்செல்லும் முகமாக வருடங்களின் சில நாட்களை தேர்வு செய்து அந்தந்த நாட்களின் மூலம் பல கருத்துக்களை ஊர்வலங்கள், கருத்துரைகள், பாடல்கள், சுவரொட்டிகள் என்றுவெவ்வேறு வடிவங்களில் முக்கியமான தினங்களை கொண்டாடகிறது. அதில் ஒன்று தான் சர்வதேச தண்ணீர் தினம் . முதன் முதலில் 1992 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் மாநாட்டில் 1993-ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் மார்ச் 22-ஆம் தேதி சர்வதேச தண்ணீர் தினமாகக் கொண்டாடுவதென முடிவு செய்யப்பட்டது. அதன்படி ஒவ்வொரு ஆண்டும் மார்ச்-22ல் வெவ்வேறு கருப்பொருளில் சர்வதேச தண்ணீர் தினம் கொண்டாடப்படுகிறது. இதுவரை கொண்டாடப்பட்ட நாட்கள் அதன் கருப்பொருளுடன் மார்ச் 22இ 1993- முதல் சர்வதேச தண்ணீர் தினம் 1994- நமது நீர்வளங்கைக் காப்பது ஒவ்வொருவரின் கடமை 1995 - தண்ணீர் பெண்களும் 1996 தவித்த நகரங்களுக்கான தண்ணீர் 1997 நிலத்தடி நீர் 1998 ஒவ்வொருவரும் தாழ்வான நதிகளின் அருகில் வாழ்கிறோம். 1999 2000 - 21 ஆம் நூற்றாண்டிற்கான தண்ணீர் 2000 தண்ணீரும் உடல் நலனும் முன்னேற்றத்திற்கான தண்ணீர் வருங்காலத்திற்கான தண்ணீர் தண்ணீரும், பேரிடர்களும் வாழ்க்கைக்கான தண்ணீர் தண்ணிரும் பண்பாடும் தண்ணீர் பற்றாக்குறை தண்ணீரும் சுகாதாரமும் (சர்வதேச சுகாதார ஆண்டை முன்னிட்டு) நாடுகளிக்கிடையேயான தண்ணீர் பங்கீடும் வாய்ப்புகளும் தண்ணீரின் தரம் பெருகி வரும் மக்கள் தொகை, நகரமயமாதல், புவி வெப்பமடைதல், தொழிற்மயம் போன்றவற்றால் நகரங்களில் ஏற்படும் தண்ணீர் சார்ந்த பேரிடர்களும், முரண்களும். தண்ணீரும் உணவுப் பாதுகாப்பும் தண்ணீர் கூட்டுறவிற்கான சர்வதேச ஆண்டு. கர்நாடகத்தோடு, காவிரி நீர் பங்கீட்டுச் சிக்கல், கேரளத்தோடு, முல்லாறு- பெரியாறு நதி நீர் பங்கீடு, ஆந்திரத்தோடு கிருஷ்ணா நதி நீருக்கான போராட்டம் என தமிழகம் தான் எத்தனை சிக்கலை சந்தித்து வருகிறது. நீருக்கான மாநிலச் சண்டை, தேசியச் சண்டை, நாடுகளிக்கிடையேயும் நதிகளுக்கான சண்டை! ஓய்வது தான் எப்போது? தண்ணீர் வளங்களைக் காப்போம்! தண்ணீரை முறையாகப் பயன்படுத்துவோம்! தண்ணீர் மாசுபடுவதைத் தடுப்போம்! நீரின்றி அமையாது உலகு!