படத்தில் வரும் சமுத்திரக்கனி மாதிரி வாத்தியார் சாத்தியமா?
வாத்தியாரை மாணவர்களுக்குப்பிடிக்கும் தான்! என் அனுபவத்தில் (இங்கே கல்லூரி மாணவர்கள் எனப்பொருள் கொள்க) அனைவருக்கும் பிடிக்குமென்பது சாத்தியமேயில்லை. ஒரு சிலருக்கு இருக்கலாம். அப்படியேயிருந்தாலும் அதை வெளிப்படுத்தும் திறன் ஒரு சிலருக்கே வாய்க்கும். பணிவிடை வாழ்த்தியல் விழாக்களில் கூட சில மாணவர்கள் பாராட்டிப்பேசக்கூடும். ஆனால் அத்தனையும் உண்மை என்பதில் எனக்கு இரு வேறு கருத்துக்கள் உண்டு.
முன்னர் போல இல்லை. ஆசிரியர் பணி ஓய்வு பெறும் போது வரும் பழைய மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாக்க்குறைந்துவிட்டது. தமிழாசிரியர்களுக்கே இந்தக்கதி தான் எனும் போது பிற துறை ஆசிரியர்களின் நிலை குறித்துக்கேட்கவே வேண்டாம். கிட்டத்தட்ட நிரந்தரப்பணி மேற்கொண்ட என் பதினேழு வருட அனுபவத்தில் ஒரு சில ஆசிரியர்களுக்கு சம்பிரதாயமாக விழா எடுத்திருக்கிறார்களேயன்றி பெரிதாகவெல்லாம் ஒன்னுமில்லை.
என் மூளையில் பதிவான ஒரு நிகழ்வு இன்று வரை நினைவில் நிழலாடிக்கொண்டேயிருக்கிறது. ஒரு மாலை வேளை. அன்று ஒரு கணிதப்பேராசிரியர் ஓய்வு பெறுகிறார். பொதுவாக மே 31 ஆம் தேதி தான் பணி நிறைவு பெறுவார்கள். பொறுப்பை ஒப்படைக்கும்விதமாக அவர் கல்லூரிக்கு வந்திருந்தார். செமஸ்டர் விடுமுறையாதலால் ஒரு சிலரே வந்திருந்தார்கள். முதல்வர் கண்டிப்பாக இருப்பார். அங்கிருக்கும் ஒரு சிலர் அவரை முதல்வர் அறைக்கு அழைத்து சின்னதாக சிறப்புச்செய்து நின்று விடுவர். பின் அவர் தனியாகச்சென்றுவிடுவதே வழக்கமாய் இருக்கும். விதிவிலக்குகள் உண்டென்றாலும், இயல்பாய் நடப்பது அப்படியே.
பெரும்பாலும் சாயுங்கால வேளையாயிருக்கும். அப்படியான தருணங்களில் தான் அவரைக்கண்ணுற்றேன். தனியாக தனது பையை எடுத்து சென்றுகொண்டிருந்தார். போகும் போது செக்யூரிட்டியிடம் ஏதோ சொன்னார். அவர்கள் பெரிதும் அலட்டிக்கொண்டதாய் தெரியவில்லை. அவர்கள் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்பவர்கள். ஆதலால் பெரிதாய் ஒன்றும் பரிச்சயமிருக்காது. அந்த வேளையில் தான் பரமசிவம் என்ற இளைஞன் வந்தான் (இப்போது அவன் உயிருடனில்லை!) அவனிடமும் அந்தபேராசிரியர் சொல்லியிருப்பார் போல சடாரென எதுவும் யோசிக்காமல் காலில் விழுந்தான். அவன் படித்திருக்கவில்லை. தனது கல்லூரியில் பணியிலிருக்கும் பேராசிரியர் என்ற அளவில் மட்டுமே தெரிந்திருப்பான். சில வேளைகளில் அவர் அவனுக்கு சிறிதளவு பணம் கொடுத்திருக்கலாம் அல்லது இல்லாதுமிருக்கலாம். இத்தனைக்கும் அவன் கடைநிலை ஊழியன். சமயங்களில் மலக்குழிகளில் இறங்கி சுத்தம் செய்வதையும் பார்த்திருக்கிறேன். அவன் மட்டுமே அதைச்செய்தான்.
அப்பேராசிரியர் பதறியடித்து அவனை எழச்செய்து கைகுழுக்கி மெல்ல விடைபெற்று பேருந்து நிறுத்தம் சென்றார். அவரின் முப்பது வருட பணிவாய்ப்பில் ஒருவர் கூடவா அவரை வீடு வரை கொண்டு செல்லும் நண்பரைப்பெறாமலிருந்திருப்பார்? எத்தனை மாணவர்கள் அவரிடம் பயின்றிருப்பர்? ஒருவருக்குக்கூடவா அவரை வீடு வரை கொண்டு விடும் எண்ணமில்லை! அவர் அன்று என்ன நினைத்திருப்பார்? எப்படித்தூங்கியிருப்பார்? அவர் துறை சார்ந்த பேராசிரியர்கள் குறித்து என்ன நினைத்திருப்பார்? நானும் அவரை வழியனுப்பினேன் தான்! அவருடனான எனது பழக்கம் வெகு குறைவே! ஆனால் என்னவோ நான் அவர் போகும் வரை பார்த்துக்கொண்டிருந்தேன்! மற்ற அலுவலகங்களில் பணிநிறைவு பெறும் போது கூட இவ்வாறு நிகழ்வதில்லை? ஏன் இவர்களுக்கு மட்டும் இப்படி?
No comments:
Post a Comment