Sunday, August 20, 2017


விலங்கியல் பாடத்தில் விலங்குகளைப்பற்றிப்படிப்பது வெகுவாக்க்குறைந்துவிட்டது. இது மிகுந்த வருத்தத்தையும் வலியையும் கொடுக்கிறது. பத்திரிக்கைகளில் கூட விலங்கியல் ஆசிரியர்களிடம் கேட்டு பிரசுரிப்பவர்களும் அரிதாகிப்போய்விட்டனர். நேற்று ஒரு கல்லூரிக்கு நிரந்தர பணியிடத்தில் பணிபுரிவதற்கான நேர்முகத்தேர்விற்கு துறை வல்லுனராக அழைத்திருந்தார்கள். அதில் கேட்ட கேள்வி இது தான்! முழுக்க முழுக்க கடலில் மட்டுமே வாழக்கூடிய தொகுதி எது? ஒருவர் கூட பதில் சொல்லவில்லை. நேநோ தொழில்நுட்பம், புரொபயாட்டிக்ஸ், புரோட்டியோமிக்ஸ் என்ற வார்த்தைகளைப்பயன்படுத்தும் அளவிற்கு புராதன விலங்கினப்பெயர்கள் குறித்து அறிந்தாரில்லை. விசனப்படுகிறேன். ரொம்பவும் டெக்னிக்கலாகச்சொல்லி உங்களை குழப்பவிரும்பவில்லை. முதுகெலும்பற்றவைகளில் முட்தோலிகள் என்று தமிழில் அழைக்கப்படும் Echinodermata தொகுதியிலுள்ள அனைத்து சிற்றினங்களுமே கடலில் மட்டுமே வாழக்கூடியவை. குறிப்பாக கடலின் தரைப்பரப்பில்! டெக்னிக்கலாக benthic உயிரிகள். எளிமையான உதாரணங்களாக sea urchin எனப்படும் கடல் குச்சி, கடல் அல்லி, நட்சத்திர மீன், கடல் வெள்ளரி என்று குறிப்பிட்டால் அறிந்துகொள்வீர்கள் தானே! வண்ணமயமான தொகுதிகளில் இதுவும் ஒன்றே! இன்னொரு விசேசமும் உண்டு. இவற்றைக்கொல்வது கடினம்! ஏனென்றால் இவை மீண்டு வளரும் தன்மை படைத்தவை, அதாவது regeneration திறன் கொண்டவை. செய்தித்தாள்களில் படித்திருப்பீர்கள் உணவுக்காகவும, அணிகலன்களுக்காகவும் அதிகம் கொல்லப்படுபவையும் இவை தான். தரைக்குக்கொண்டு வந்தால் கொன்றுவிடமுடியும். அதன் வாழிடத்தில் சாத்தியமில்லை என்று பொருள் கொள்ளவும். கடல் குச்சிகளின் இனப்பெருக்க மண்டலம் (ரொம்பச்சரியாகவெனில் கொனாடுகள்) அவ்வளவு ருசியாக இருக்கும் என்பதற்காகவே அதிக அளவு கொல்லப்படுகிறது. கடல் வெள்ளரிகளை உலர்த்தி சுருங்கிய பின் அணிகலன்களாக அணிந்துகொள்பவர்களும் உண்டு. ஒரு விசயத்தில் நட்சத்திர மீன்களை மனிதர்கள் எதிரிகளாகப்பார்க்கிறார்கள் காரணம் இவை முத்துச்சிப்பிகளை அல்லது முத்துக்கள் உருவாக்கும் சிப்பிகளைக்கொல்வதால். இன்னுமொரு விசேடம் என்னவென்றால் இவைகளுக்குத்தலையும் கிடையாது.

No comments: