Sunday, August 20, 2017


டெங்கி காய்ச்சல் எப்படி பரவுகிறது? டெங்கி காய்ச்சலை உண்டு பண்ணும் வைரசை டெங்கி வைரஸ் என்பார்கள். இதில் நான்கு வகைகள் உண்டு. இது பிளேவி வைரஸ் வகைகளை சார்ந்தது. இந்த வைரசுகள் ஆசிய புலிக்கொசு (ஏடிஸ் அல்போபிக்டஸ்), மற்றும் ஏடிஸ் இஜிப்திஐ என்ற கொசுக்களினால் பரவுகிறது. இந்த கொசுக்கள் மனிதர்கள் உபயோகப்படுத்தும் பொருட்களில் (தண்ணீர்த்தொட்டிகள், பாத்திரங்கள், டயர்கள், உடைந்த குடங்கள் மற்றும் பல...) உள்ள நன்னீரில் இனப்பெருக்கம் செய்பவை. டெங்கி என்ன தான் செய்யும்? கொசுக்களால் இந்த வைரசுகள் நம் ரத்த நாளங்களில் செலுத்தப்படும். செலுத்திய ஒரு வாரத்திற்குப்பின் தான் நோய்க்கான அறிகுறிகள் தென்படும். உடலில் வலி, மூட்டு வலி, காய்ச்சல், விழி வட்டத்தில் வலி (கண் தெறிப்பது போல் வலிக்கும்) ஏற்படும். சில சமயம் வாந்தி, குமட்டல், தோலில் புண் என்று கொஞ்சம் கொஞ்சமாக அறிகுறிகள் அதிகரிக்கும். நோய் வந்த முதல் கட்டத்தில் டெங்கி காய்ச்சல் ஏற்படும். வைரசுகள் நம் உடலில் பெருகப்பெருக நோயின் தீவிரம் அதிகரிக்கும். இது இரண்டாம் நிலை. இந்த காய்ச்சலுக்கு டெங்கி ரத்தப்போக்கு காய்ச்சல் என்று பெயர். விழித்திரையிலிருந்து ரத்தம் வரலாம், தோலில் உள்ள புண்களிளிருந்து ரத்தம் கசியலாம். அடுத்து மிகவும் கொடூரமான மூன்றாம் நிலை டெங்கி சாக் சிண்ட்ரோம். இது நிச்சயமாக உயிரைப் பறித்துவிடும். நாம் என்ன செய்ய வேண்டும்? நம் சுற்றுப்புறங்களில் தேங்கிய நீர் இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இது எப்படி சாத்தியம்? பரவலான விழிப்புணர்வும், மக்களின், தொண்டு நிறுவனங்களின், அறிவியல் இயக்கங்களின் பங்கு மிக அவசியம். விரிவாக எடுத்துச் செல்லும் பட்சத்தில் நோயை அடுத்த கட்டத்திற்கு செல்லாதவாறு தடுத்து விடலாம். நோய் முற்றினால் காப்பாற்றுவது கடினம். உண்மையில் டெங்கி ஆட்க்கொல்லி நோயல்ல. பெரும்பாலும் குழந்தைகள் தான் பாதிக்கப் படுகிறார்கள். முதியோர்களும் அடக்கம். ஏதாவது தடுப்பு ஊசி உள்ளதா? இன்று வரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஏராளமான ஆராய்ச்சிகள் நடந்து கொண்டே தான் இருக்கிறது. விரைவில் கண்டுபிடித்துவிடுவார்கள் என நம்புவோம். வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட மருந்துகள் கிடைக்கின்றன. இறக்குமதி செய்யவேண்டும். இந்தியாவில் மட்டும் தான் இந்த அச்சுறுத்தலா? வெப்ப மண்டல நாடுகளில் தான் இந்த கொசுக்களின் தாக்கமும், வைரசுகளின் தாக்கமும் அதிகம். நம்மை விட தாய்லாந்துக்காரர்கள் அதிகம் சிரமப்படுகிறார்கள். இலங்கையிலும், சீனாவிலும் இவ்வகை கொசுககள் உள்ளன. அதனால் சர்வதேச முக்கியத்துவம் உண்டு. இந்த கொசுக்களை அழிக்கவே முடியாதா? நாம் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். பரிணாமத்தில் நாமெல்லாம் நேற்று வந்தவர்கள். கொசுக்கள் எல்லாம் நம்மைவிட லட்சக்கணக்கான வருடங்களுக்கு முன்னரே பரிணமித்துவிட்டன. நாம் தான் எத்தனை எத்தனை கொசுவிரட்டிகளை (கவனிக்கவும் கொசுவிரட்டி - கொசுக்கொல்லி அல்ல) சந்தித்து விட்டோம். இதன் பயன் கொசுக்களின் சிற்றினங்களிலேயே பல வகைகள் மரபணு மாற்றத்தின் விளைவாக தோன்றி விட்டன. எல்லாவிதமான வேதிக் கொல்லிகளையும் எதிர்கொள்ளும் திறனை இந்த கொசுக்கள் பெற்றுவிட்டது. லார்வாக்களை மட்டுமே அழிக்க முடியும். அதுவும் நீரில் வாழ்வதால் அவை பறந்து தப்பித்துச் செல்ல வாய்ப்பில்லை லார்வாக்களின் வாழ்விடத்தை அழித்தாலே இந்த நோயின் தீவிரத்தைக் குறைக்கலாம். என்ன தான் செய்கிறார்கள் இந்த விஞ்ஞானிகள்? தொழில்நுட்பத்தை பயன்படுத்தி லார்வாக்களின் உண்ணும் திறனை அழித்துவிட முடியும் என்கிறார்கள். மரபு மாற்றம் செய்யப்பட்ட கொசுக்களை பொது இடங்களில் பறக்க விட்டு அவற்றை இயற்கையான கொசு இனங்களோடு கலவி செய்து அவைகளை மலடாக்கலாம் என்று எத்தனையோ திட்டங்கள் வைத்திருக்கிறார்கள். ஆனால் சுற்றுச் சூழலில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டு நமக்கே வினையாகப் போய்விட்டால் என்ன செய்வது என்ற குழப்பமும் உள்ளது. தடுப்பு ஊசி தயாரிப்பதில் முனைப்போடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். சாதிப்பார்கள் என நம்புவோம்.

No comments: