Saturday, February 2, 2013

புவி வெப்பமடைதலும் கடல் வளத் தாக்கமும் - முனைவர் எஸ்.தினகரன்


இந்தியாவிலேயே மிக நீளமான கற்கரை, 13 கடற்கரை மாவட்டங்கள், 442 மீன்பிடி கிராமங்கள், 362 மீன் இறக்கப்படும் தளங்கள், 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள், சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட நேரடி மீன்பிடித் தொழிலாளர்கள், ஆயிரக்கணக்கான இயந்திரப் படகுகள், பல்லாயிரக்கணக்கான பல்லாயிரக்கணக்கான மோட்டார் பொருத்தப்பட்ட மற்றும் பொருத்தப்படாத கட்டுமரங்கள் மற்றும் வல்லங்கள் 14 வகைத் துடுப்பு மீன்கள் 3 மேலோட்டுக் கணுக்காலிகள் என அனைத்து வளங்கள் இருந்தும் தமிழக மீனவர்களின் நிலை பரிதாபகரமானதாகவும், உயிர்ச் சேதங்கள் நிறைந்ததாகவும், பாதுகாப்பற்றதாகவும் உள்ளதே ஏன் ! இந்திய - இலங்கை கடல் எல்லைப் பிரச்சனை, மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு, வலைகளை அறுத்து மீனவர்களை அடித்து விரட்டிய இலங்கை கடறப்டையினர் என்று தினமும் ஏராளமான செய்திகளை அநேகமாக அனைத்து ஊடகங்களும் வெளியிட்டுவிட்டன. ஆனாலும் மீனவர்கள் பாடுதான் விடிந்தபாடில்லை! ஏன் இவர்களுக்கு இந்த அச்சறுத்தல்! இதற்கெல்லாம் காரணம்தான் என்ன? விடை தேடலின் போது கிடைத்த விஷயங்கள் ஒன்று இயற்கை சார்ந்தது, பிரிதொன்று இலங்கைக் கடற்படை சார்ந்தது. காற்றின் வெப்பநிலை கூடக்கூட கடல் நீரின் அடர்த்தி குறைந்து நீரில் கரைந்துள்ள உணவுப் பொருட்கள் ஒரு படிமமாக கீழே தனியொரு அடுக்காக உருவாகி விடுகிறது. அதனால் கடல்வாழ் உயிரினங்களுக்கப் போதுமான உணவு கிடைக்காமல் போவதற்கு வாய்ப்பிருக்கிறது. உதாரணமாக, நீரின் மேல்பரப்பில் வாழக்கூடிய தாவர மிதவை உயிரிகளுக்கும், சில வகை பாசிகளுக்கும் கிடைக்கக்கூடிய உணவுப் பொருட்கள் மேல் நோக்கி வருவது புவி வெப்பமடைதலால் தடைபடுகிறது. இதனால் இவ்வுயிரிகள் வெப்பமான கடல் பகுதிகளில் வாழ்வது குறைந்து விடுகிறது. இவ்வுயிர்கள்தான் உணவுச் சங்கியின் அடிப்படை உயிர்கள். இவை அதிகமாக வாழ்ந்தால் தான் இவ்வுயிர்களை நுகரும் கடல் வாழ் உயிரினங்கள் உயிர் வாழ முடியும். இது உணவுச் சங்கிலி அறுபட ஏதுவாகிறது.
புவி வெப்பமடைதலின் பொருட்டு ஏற்படும் கடலின் அமிலத்தன்மை, பவளப்பாறைகளுக்கு பெரும் கேடு விளைவிக்கிறது. அதன் விளைவாக பவளப் பாறைகளின் மத்தியில் இனப் பெருக்கம் செய்யும் மீன்கள் வாழ ஏதுவான சூழல் அமைவதில்லை. அதன் பொருட்டு மீன் உற்பத்தி குறைகிறது. சுமார் 550 லட்சம் வருடங்களுக்கு முன்னதாக கடல் அமிலத் தன்மை மிகுந்ததாகக் காணப்பட்டது. அதன் விளைவாக பெரும்பாலான உயிரினங்கள் அழிந்து போயின. அந்த நிலை மாறுவதற்கு ஏறத்தாழ்வு 1 லட்சம் வருடங்கள் ஆனதாகவும், அதன் பிறகே கடல் வாழ் உயிரினங்கள் வாழும் சூழல் ஏற்பட்டதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். அதுபோன்ற ஒரு நிலைக்கு நாம் நம் கடல் பகுதிகளை தள்ளிக்கொண்டிருக்கிறோம். இன்று மனித நடவடிக்கைகளால் மறுமுறை கடல் அமிலத்தன்மையை அடைந்திருக்கிறது. இது நிச்சயம் பல உயிரினங்களை காவு கொள்ளத்தான் போகிறது. அடுத்த அச்சுறுத்தல் ட்ராலர்கள் என்றழைக்கப்படும் பெரிய மீன்பிடிப் படகுகள். இப்படகுகளில் பயன்படுத்தப்படும் இரட்டை மடி வலைகள், பெரிய மீன்களுடன், நாளைய பெரிய மீன்களான சிறு சிறு மீன்கள் மற்றும் அதற்கான உணவு உயிர்களையும் வழித்து எடுத்து விடுவதால், வருங்கால மீன் வளக் குறைவு, சிறு படகுகள் மற்றும் வல்லங்களில் சென்று மீன் பிடிக்கும் மீனவர்களை பாதிக்கிறது. இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை தாக்குவதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஏதோ வகையில் விடுதலைப்புலிகளடன் தொடர்பு வைத்திருப்பார்களோ! அல்லது உதவுகிறார்களோ? என்ற தவறான அச்சம் ஒரு புறம் இருக்க, இலங்கை மீனவர்களும் இந்த கடல் பகுதியை சார்ந்த வாழ்வாதாரங்களை நம்பியே பிழைக்கிறார்கள். இந்திய - இலங்கை கடல் வளங்கள் இரண்டு நாட்டுக்கும் பொதுவானவை என்ற ஒப்பந்தங்களும் உண்டு. 1984- வரை ஓரளவு ஒப்பந்தங்கள் காப்பாற்றப்பட்டே வந்திருகிறது. அதன் பின்னர் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் காரணமாக மீன் வளங்களை கையகப்படுத்துவதில் தகராறு ஆரம்பித்திருக்கிறது. இரு நாடுகளின் முன்பிடி படகுகளை ஒப்பிட்டோமேயானால், கிட்டத்தட்ட இலங்கையை விட நான்கு மடங்கு ட்ராலர்கள் நம்மிடம் உண்டு. அதனால் இயல்பாகவே நாம் தான் அதிக அளவில் அனுபவிக்கிறோம் என்ற கருத்து உலவுவதால் இலங்கை கடற்படையினர் அடித்து விரட்டுவதற்கும், நம்மை வளங்களை சூறையாடுபவர்களாகப் பார்ப்பதற்கும் வாய்ப்பிருக்கிறது. பருவநிலை மாற்றம், அதீத மீன்பிடி படகுகளை பயன்படுத்தி மீன் பிடித்தல், தொழிற் சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகள், எரிசக்தி உற்பத்திக் கழிவுகள் எல்லாவற்றிற்கும் மேலாக புவி வெப்பமடைதல் என அனைத்துக் காரணிகளும் கடலின் ஆரோக்கியத்திற்கும் அது சார்ந்த உயிர்களுக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கிறது. இயல்பாகவே நீடித்த, நிலைத்த முறையான உணவுச் சங்கிலியின் உதவியால் தொழிற்புரட்சிக்கு முன்னும், அதிக மக்கள்தொகை பெருக்கத்திற்கும் முன்பும், கடல் இயல்பான தன்மையோடும், தனக்கேயுரிய வளங்களோடும் கடலை நம்பியுள்ள மீனவ குடும்பங்களுக்கு போதிய வாழ்வாதாரத்தைக் கொடுத்தும் வந்திருக்கிறது. ஆனால் மனிதனால் ஏற்படுத்தப்பட்ட புவி வெப்பமடைதலுக்குப் பின் கடல் சீற்றமும், கடல் வளக்குறைவும், அதன் பொருட்டு ஏற்பட்ட இயற்கை வள அழிவும், பருவநிலை மாற்றமும், மழை பொய்த்தலும், மிகவும் கவலை அளிக்கக் கூடிய செயலாக அமைகிறது. இனியாவது விழித்துக்கொள்ளவோம்! புவி வெப்பமயமாதலை இயன்ற அளவு குறைப்போம்!

Saturday, November 3, 2012

மாற்றானில் சூர்யா நடித்திருக்கும் கதாபாத்திரமான அகிலன் -விமலனுக்கு பத்து அப்பா என்று அவரது அப்பாவாக நடித்திருக்கும் சச்சின் கட்கர் சொல்கிறார் இது சாத்தியமா?

மாற்றானில் சூர்யா நடித்திருக்கும் கதாபாத்திரமான அகிலன் -விமலனுக்கு பத்து அப்பா என்று அவரது அப்பாவாக நடித்திருக்கும் சச்சின் கட்கர் சொல்கிறார் இது சாத்தியமா? மனிதர்களை க்ளோனிங் முறையில் உருவாக்குவதற்கு தடை இருக்கிறது. ரகசியமாக செய்ய முடியாது. மரபணு மாற்றங்களின் மூலம் பத்து பேருடைய ஜீனியங்களை கொண்டுவருவது நடை முறை சாத்தியமில்லை. சமீபத்தில் தனது ஸ்டெம் செல் ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்ற யமனக்காவும், கர்டனும் கூட நாலே நாலு ஜீன்களை மட்டுமே இடைச்செருகி அனைத்து செல்களையும் உருவாக்கும் திறன் படைத்த ஸ்டெம் செல்களை உருவாக்கியிருக்கிறார்கள். இனி ஒவ்வொரு குழந்தையும் பிறக்கும் போது அதன் கருவிலுள்ள செல்களை எடுத்து பாதுகாத்து ஏதேனும் உறுப்புகள் சேதம் ஏற்படும் போது அதை உருவாக்க வேண்டிய அவசியம் இனி இருக்காது. ரத்தத்திலிருந்து (சிவப்பணுக்கள் நீங்கலாக) எடுக்கப்படும் செல்களிலிருந்து எந்த விதமான சேதமடைந்த உறுப்புகளையும் (மூளை, இதயம், அல்சீமர் குறைபாடுகள், இன்னும் பல..) சீர் செய்துவிட முடியும். இதற்கே இவ்வளவு காலமாகிவிட்டது. சரி படம் தானே என்று விட்டுவிடவும் முடியவில்லை என்னவோ அனைத்து தொழில்நுட்பமும் அழிவிற்குத்தான் என்ற முறையில் படமாக்கியிருப்பது கண்டிக்கத்தக்கது. அரைகுறையாக அறிவியலை, அதன் தொழில்நுட்பத்தை, மக்களிடம் கொண்டு செல்லும் பொது கவனம் தேவை. பொத்தாம் பொதுவாக உலகம் 2012 ல் அழியபோகிறது என்று சொன்னால்கூட நம்பும் கூட்டம் நம்மிடையே நிறைய உண்டு.
ஒட்டிப்பிறந்த ரெட்டையர்களில் ஒரே சூழலில் வாழும்போது வெவ்வேறு குணாதிசயம் சாத்தியமா? சத்தியமாக இல்லை. கிட்டத்தட்ட 99 சதவீதம் ஒரேமாதிரியாகத்தான் இருக்கும். அவருக்கு கோபம் வந்தால் இவர் அடிப்பார் போன்ற மூட நம்பிக்கைகள் தவிர்த்து... ஒட்டிப்பிறந்த ரெட்டையர்கள் சண்டையெல்லாம் போட முடியுமா? சாத்தியமே இல்லை ஒரு இதயம் இருக்கும்பட்சத்தில் நெஞ்செலும்பு கூட ஒட்டியே இருக்கும். சர்வசாதரணமாக நடனமோ, சண்டையோ போட முடியாது. மாற்றானில், சிபோபகுஸ் என்ற இரட்டைப்பிறவி வகையை வைத்து வடிவமைத்திருக்கிறார்கள். இந்த வகை குழந்தைகளுக்கு மார்பெலும்பும், வயிற்றுப் பகுதியும் ஒட்டியிருக்கும். டெஸ்ட் ட்யூப் குழந்தைகளில் ஒட்டிப்பிறந்த ரெட்டையர்கள் சாத்தியமா? சாத்தியமேயில்லை. பாலில் கலந்திருக்கும் ஸ்டீராய்டுகளை கண்டறிய முடியாதா? அதெல்லாம் சும்மா? L C/MS/MS மூலம் கண்டுபிடிக்கலாம் ராணுவ ஆராய்ச்சிக் கூடத்திற்கு நினைத்த மாத்திரம் போய்விட முடியாது அமைச்சரே ஆனாலும் கூட. உக்கரைன் நாட்டுல கால்பந்து தான் பிரதான விளையாட்டு 94 ல தான் ஒலிம்பிகிலேயே கலந்து கொண்டார்கள். பதக்கப் பட்டியலில் ஒலிம்பிக்கில் 35 வது இடம் ஏன் இந்த கொலைவெறி? அந்த நாடு மேல.. இன்னும் ஏராளமான கேள்விகள் உண்டு

Tuesday, October 23, 2012


டெங்கி காய்ச்சல் எப்படி பரவுகிறது? டெங்கி காய்ச்சலை உண்டு பண்ணும் வைரசை டெங்கி வைரஸ் என்பார்கள். இதில் நான்கு வகைகள் உண்டு. இது பிளேவி வைரஸ் வகைகளை சார்ந்தது. இந்த வைரசுகள் ஆசிய புலிக்கொசு (ஏடிஸ் அல்போபிக்டஸ்), மற்றும் ஏடிஸ் இஜிப்திஐ என்ற கொசுக்களினால் பரவுகிறது. இந்த கொசுக்கள் மனிதர்கள் உபயோகப்படுத்தும் பொருட்களில் (தண்ணீர்த்தொட்டிகள், பாத்திரங்கள், டயர்கள், உடைந்த குடங்கள் மற்றும் பல...) உள்ள நன்னீரில் இனப்பெருக்கம் செய்பவை. டெங்கி என்ன தான் செய்யும்? கொசுக்களால் இந்த வைரசுகள் நம் ரத்த நாளங்களில் செலுத்தப்படும். செலுத்திய ஒரு வாரத்திற்குப்பின் தான் நோய்க்கான அறிகுறிகள் தென்படும். உடலில் வலி, மூட்டு வலி, காய்ச்சல், விழி வட்டத்தில் வலி (கண் தெறிப்பது போல் வலிக்கும்) ஏற்படும். சில சமயம் வாந்தி, குமட்டல், தோலில் புண் என்று கொஞ்சம் கொஞ்சமாக அறிகுறிகள் அதிகரிக்கும். நோய் வந்த முதல் கட்டத்தில் டெங்கி காய்ச்சல் ஏற்படும். வைரசுகள் நம் உடலில் பெருகப்பெருக நோயின் தீவிரம் அதிகரிக்கும். இது இரண்டாம் நிலை. இந்த காய்ச்சலுக்கு டெங்கி ரத்தப்போக்கு காய்ச்சல் என்று பெயர். விழித்திரையிலிருந்து ரத்தம் வரலாம், தோலில் உள்ள புண்களிளிருந்து ரத்தம் கசியலாம். அடுத்து மிகவும் கொடூரமான மூன்றாம் நிலை டெங்கி சாக் சிண்ட்ரோம். இது நிச்சயமாக உயிரைப் பறித்துவிடும். நாம் என்ன செய்ய வேண்டும்? நம் சுற்றுப்புறங்களில் தேங்கிய நீர் இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இது எப்படி சாத்தியம்? பரவலான விழிப்புணர்வும், மக்களின், தொண்டு நிறுவனங்களின், அறிவியல் இயக்கங்களின் பங்கு மிக அவசியம். விரிவாக எடுத்துச் செல்லும் பட்சத்தில் நோயை அடுத்த கட்டத்திற்கு செல்லாதவாறு தடுத்து விடலாம். நோய் முற்றினால் காப்பாற்றுவது கடினம். உண்மையில் டெங்கி ஆட்க்கொல்லி நோயல்ல. பெரும்பாலும் குழந்தைகள் தான் பாதிக்கப் படுகிறார்கள். முதியோர்களும் அடக்கம். ஏதாவது தடுப்பு ஊசி உள்ளதா? இன்று வரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஏராளமான ஆராய்ச்சிகள் நடந்து கொண்டே தான் இருக்கிறது. விரைவில் கண்டுபிடித்துவிடுவார்கள் என நம்புவோம். வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட மருந்துகள் கிடைக்கின்றன. இறக்குமதி செய்யவேண்டும். இந்தியாவில் மட்டும் தான் இந்த அச்சுறுத்தலா? வெப்ப மண்டல நாடுகளில் தான் இந்த கொசுக்களின் தாக்கமும், வைரசுகளின் தாக்கமும் அதிகம். நம்மை விட தாய்லாந்துக்காரர்கள் அதிகம் சிரமப்படுகிறார்கள். இலங்கையிலும், சீனாவிலும் இவ்வகை கொசுககள் உள்ளன. அதனால் சர்வதேச முக்கியத்துவம் உண்டு. இந்த கொசுக்களை அழிக்கவே முடியாதா? நாம் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். பரிணாமத்தில் நாமெல்லாம் நேற்று வந்தவர்கள். கொசுக்கள் எல்லாம் நம்மைவிட லட்சக்கணக்கான வருடங்களுக்கு முன்னரே பரிணமித்துவிட்டன. நாம் தான் எத்தனை எத்தனை கொசுவிரட்டிகளை (கவனிக்கவும் கொசுவிரட்டி - கொசுக்கொல்லி அல்ல) சந்தித்து விட்டோம். இதன் பயன் கொசுக்களின் சிற்றினங்களிலேயே பல வகைகள் மரபணு மாற்றத்தின் விளைவாக தோன்றி விட்டன. எல்லாவிதமான வேதிக் கொல்லிகளையும் எதிர்கொள்ளும் திறனை இந்த கொசுக்கள் பெற்றுவிட்டது. லார்வாக்களை மட்டுமே அழிக்க முடியும். அதுவும் நீரில் வாழ்வதால் அவை பறந்து தப்பித்துச் செல்ல வாய்ப்பில்லை லார்வாக்களின் வாழ்விடத்தை அழித்தாலே இந்த நோயின் தீவிரத்தைக் குறைக்கலாம். என்ன தான் செய்கிறார்கள் இந்த விஞ்ஞானிகள்? தொழில்நுட்பத்தை பயன்படுத்தி லார்வாக்களின் உண்ணும் திறனை அழித்துவிட முடியும் என்கிறார்கள். மரபு மாற்றம் செய்யப்பட்ட கொசுக்களை பொது இடங்களில் பறக்க விட்டு அவற்றை இயற்கையான கொசு இனங்களோடு கலவி செய்து அவைகளை மலடாக்கலாம் என்று எத்தனையோ திட்டங்கள் வைத்திருக்கிறார்கள். ஆனால் சுற்றுச் சூழலில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டு நமக்கே வினையாகப் போய்விட்டால் என்ன செய்வது என்ற குழப்பமும் உள்ளது. தடுப்பு ஊசி தயாரிப்பதில் முனைப்போடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். சாதிப்பார்கள் என நம்புவோம்.

Sunday, October 21, 2012

மின்வெட்டும் டெங்கி காய்ச்சலும்


ஆசிய புலிக்கொசு (ஏடிஸ் அல்போபிக்டஸ்), மற்றும் ஏடிஸ் இஜிப்திஐ என்ற என்ற இரண்டு கொசு வகைகள் தான் டெங்கி (டெங்கு அல்ல) காய்ச்சலுக்கு காரணமானவை. இவை நல்ல தண்ணீரில் தான் இனப்பெருக்கம் செய்யும். பெரும்பாலும் இவை பகலில் தான் மனிதர்களை கடிக்கும். இந்த கொசுக்கள் தான் டெங்கி வைரசுகளை மனிதனுக்குள் ரத்தத்தின் மூலமாக செலுத்தி டெங்கி காய்ச்சலை ஏற்படுத்துகின்றன. நான்கு விதமான டெங்கி வைரசுகள் உள்ளன. அவை DENV 1, DENV 2, DENV 3 மற்றும் DENV 4 ஆகும். டெங்கி காய்ச்சல், டெங்கி ரத்தப்போக்கு காய்ச்சல் என்று டெங்கி காய்ச்சலின் வகைகளும் உண்டு. இதில் டெங்கி ரத்தப்போக்கு காய்ச்சல் தான் கொடூரமானது. இதற்கு இதுவரை எந்த தடுப்பு ஊசியும் கண்டுபிடிக்கப்படவில்லை. அதுமட்டுமல்ல ஊருக்கு ஊர் இதன் வகைகளும் மாறுபடும். பருவமழைக்குப் பின் தான் இதன் தாக்கம் அதிகமாயிருக்கும். இன்னும் ஓரிரண்டு மாதம் தான் பின் அடுத்த பருவ மழைக்காலம் வரை தப்பிக்கலாம். டெங்கி மட்டுமல்ல எந்த வைரசுகளும் நம் உடலில் வந்துவிட்டால் சாகும் வரை நம்முடனே இருக்கும். நாம் பலவீனப்படும் போது அவை தலை தூக்கும். எனவே தான் தடுப்பு ஊசி அவசியம். சமீப காலமாக நம் தமிழகம் தாங்க முடியாத மின்வெட்டை சந்தித்து வருகிறது. மின்வெட்டுக்கும் டெங்கி காய்ச்சலுக்கும் தொடர்புண்டு. நினைத்த வேளையில் நம்மால் போர்வெல் இயந்திரங்களை இயக்க முடியாததால் நாம் தண்ணீர் பிடித்து வைக்கிறோம். ஆனால் அவையே இந்த கொசுக்கள் இனப்பெருக்கம் செய்ய ஏதுவாகிறது. தற்போதுள்ள சூழலுக்கு தகுந்தாற்போல வாழக் கற்றுக்கொள்ளுங்கள். தப்பித்துக் கொள்ளலாம்.

Tuesday, May 15, 2012

யானைகள் - மனிதர்கள் ஒத்திசைந்து வாழ்தல் குறித்த ஒரு பார்வை - Dr. S. தினகரன்


வலசை செல்லும் பாதைகளில் உள்ள விவசாய நிலங்களும், எஸ்டேட்டுகளும் தான் யானைகளால் பரவலாக பாதிக்கப்படுகின்றன. யானைகளும் மனிதர்களும் ஒத்திசைந்து ஒரே இடத்தில் வாழும் சாத்தியக்கூறுகளை உருவாக்கும் முயற்சிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருப்பினும் பயத்தோடும், ஒருவித மரியாதையோடும் தான் அங்கு வாழும் மக்கள் இருக்கிறார்கள். மற்ற நாடுகளைபோல் அல்லாமல் நமது நிலப்பரப்பு குறைவு ஆனால் இருப்பிட வசதி என்பது வனவிலங்குகளுக்கும் சரி, மனிதனுக்கும் சரி போதுமானதாய் இல்லை. வன விலங்குகளுக்கு அதற்கான வாழும் சூழலைத்தரவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். ஒரு நாட்டில் 33 சதவீதத்திற்கும் குறைவாக காடுகள் இருக்கும்பட்சத்தில், அந்த நாட்டை வளமான நாடாக கருத முடியாது. இந்தியாவில் சுமார் 19.4 சதவீதம் தான் காடுகள் உள்ளன. அதேவேளையில், இருக்கும் வனவிலங்குகளை எவ்வாறு பாது காப்பது? அதற்கான வாழும் சூழலை எப்படி உருவாக்குவது? மனித-வனவிலங்குகளுக்கிடையேயான முரண்களை களைவது எப்படி? என்று நம்முன் ஏராளமான கேள்விகள் நிற்கின்றன. உதாரணமாக, யானைகளால் மனிதர்களுக்கு ஏற்பட்ட இழப்புகளும், மனிதர்களால் யானைகளுக்கு ஏற்பட்ட இழப்புகளும் உற்று கவனிக்கப்பட வேண்டியவை. இவர்களுக்கிடையேயான முரண்களை களையும் அவசியமும் இருக்கிறது. ஏனென்றால், யானை, வனச்சூழலில் ஒரு முக்கியமான விலங்கு. வன ஆரோக்கியத்தின் கண்ணாடி. உணவுச்சங்கிலியின் ஒரு முக்கியச்சரடு. யானைகளின் இழப்பு, யானைகளை மட்டும் பாதிப்பதில்லை அந்த வனத்தின் ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது.
இது குறித்து ஆராய்ச்சி செய்வதற்காக ஒரு எட்டு பேர் அடங்கிய குழு ஒன்று நேதாஜி பாம்புகள் அறக்கட்டளை சார்பாக மே மாதம் இரண்டாம் வாரத்தில் யானைகள் அதிகம் வலசை செல்லும் பகுததிகளில் உள்ள முக்கியமான மலைக்கிராமங்களான மணலாறு, மேலமணலாறு ஆரம்பித்து கூடலூர் வரையிலான தொழு, எள்ளுக்கட்டுப்பாறை, மூணாண்டிபட்டி, வெட்டுப்பட்டி போன்ற கிராமங்கள் வரை ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. ஆய்வுகளின் நோக்கம், யானைகளை அப்பகுதி மக்கள் எவ்வாறு புரிந்து வைத்திருக்கிறார்கள்? தப்பிப்பதற்கு என்னென்ன முறைகளை கையாளுகிறார்கள்? யானைகள் மத்தியில் வாழும் சூழல் எவ்வாறு இருக்கிறது? என்பது உள்ளிட்ட சுமார் 50 கேள்விகளை அவர்கள் முன்வைத்து அதற்கான பதில்களும், பெற்றோர்கள், ஆசிரியர்கள், குழந்தைகள் உள்பட அனைவரின் கருத்துக்களும் பதிவு செய்யப்பட்டது. ஆய்வுகளின் முக்கியமான சாரங்களாக கீழே வருவன தொகுக்கப்பட்டிருக்கிறது: • யானைகளால் கொல்லப்பட்டவர்களில் அநேகம்பேர் இரவுக்காவலுக்காக யானை வலசை செல்லும் பாதைகளிலுள்ள பட்டா நிலங்களில் விவசாயக்காவல் செய்வதற்காக அங்கே தங்கியிருக்கும் சமயத்தில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். யானை பயத்தின் காரணமாக, தேவாரத்திற்கு அருகிலுள்ள பல கிராமங்களில், குறிப்பாக பிரம்புப்பட்டி, இரவுக்காவலுக்கு செல்வது முற்றிலும் நின்றுவிட்டது. பகலில் மட்டுமே விவசாயப்பணிகளை மேற்க்கொள்கிறார்கள். • அங்குள்ள பலருக்கு தமக்கு இங்கு வாழ எவ்வளவு உரிமை உள்ளதோ அதே உரிமை யானைகளுக்கும் இருக்கிறது என்பதை உணர்ந்திருக்கிறார்கள். யானைகள் பாதுகாப்பு பற்றிய சட்டங்கள் இருப்பதையும் அறிந்து வைத்திருக்கிறார்கள். • யானைகளால் ஏற்பட்ட பயிர்ச்சேதங்களுக்கு அரசாங்கத்திடமிருந்து தக்க உதவித்தொகை தங்களுக்கு கிடைக்கவில்லை என்ற மனக்குறையோடு இருக்கிறார்கள். • யானைகளை விட பன்றிகளாலும், சிறுத்தைகளாலும் தான் தொல்லைகள் அதிகமுள்ளதாகக் கூறுகிறார்கள். • வனத்துறையிலிருந்து காடுகளில் விடப்படும் வனவிலங்குகள் குறித்த அச்சம் பரவலாகத்தென்படுகிறது. • ஹைவேவிஸ் மலைக்கிராமங்களில், அம்மலையின் தேயிலைத்தோட்ட நிர்வாகமே யானைகள் ஏற்படுத்திய சேதங்களை சரிசெய்து கொடுத்து விடுவதால் அவர்கள் பெருங்கவலை கொள்வதில்லை. தாங்களே விவசாயம் செய்து கொள்ளும் மக்கள் மட்டுமே இது பற்றி கவலை தெரிவிக்கிறார்கள். • மலைக்கிராமங்களில் உள்ள பள்ளிகளில் பெரும்பாலான ஆசிரிய, ஆசிரியைகள் அந்தந்த கிராமங்களில் தங்குவதில்லை அருகிலுள்ள நகரத்திலிருந்தே வருகின்றனர். பெரும்பாலான குழந்தைகள் வெளியூருக்குச் சென்றே கல்வி பயில்கிறார்கள். • வனம் சார்ந்த குற்றங்கள் ஓரளவிற்கு குறைந்துள்ளதாகத் தெரிவிக்கிறார்கள். 2004 ஆம் ஆண்டு வரை யானைகள் தந்தங்களுக்காக சுடப்பட்ட சம்பவங்கள் நடந்திருப்பதாகவும் இப்போது மிகவும் குறைந்துள்ளதாகவும் கூறுகிறார்கள். • வனக்குற்றங்களில் ஈடுபட்ட சுமார் 26 முன்னாள் குற்றவாளிகளைக் கொண்ட “விடியல்” என்ற அமைப்பை கேரளா வனத்துறை கூடலூரில் இயக்கி வருகிறது. இவர்கள் சந்தன மரங்கள் வெட்டுவதையும், வனவிலங்குகளை வேட்டையாடுவதையும் கண்காணிக்கிறார்கள். கூடவே வெளிநாட்டுப் பயணிகளை மாட்டு வண்டிகளில் வைத்து விவசாய நிலங்களை சுற்றிக்காட்டுகிறார்கள். சமீபத்தில் ஏற்பட்ட முல்லை-பெரியாறு விவகாரத்தில் விடியல் அலுவலகத்தை முற்றாக சிதைத்திருக்கிறார்கள் கலவரக்காரர்கள். • யானைகளால் கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பெண்கள். ஆண்களும் உண்டு ஆனால் குறைந்த சதவீதமே. • யானைகளிடமிருந்து தங்களை பாதுகாக்க அகழி அமைத்து அதில் வசிக்கிறார்கள் அல்லது பெரிய மரங்களில் மாடமோ அல்லது பரணோ அமைத்து அதில் தங்கிக்கொள்கிறார்கள். • படாங் மற்றும் வான வெடிகள் வெடித்து யானைகளை விரட்டுகிறார்கள். இவை எதுவும் இல்லாத பட்சத்தில் எண்ணை டின்களையும், கதவுகளையும், ஜன்னல்களையும் தட்டி ஓசை எழுப்பி விரட்டுகிறார்கள் அல்லது மலையாளத்திலோ, தமிழிலோ நாங்கள் எல்லாம் பிழைக்க வந்திருக்கிறோம் எங்களை ஒன்றும் செய்யாமல் போய்விடுங்கள் என்று இறைஞ்சுவதாகக் கூறுகிறார்கள். கூக்குரல்களை யானைகள் விரும்புவதில்லை, எரிச்சல் பட்டு தங்களை நோக்கி வர வாய்ப்புள்ளதாக பயப்படுகிறார்கள். • காவலுக்குள்ள நாய்கள் குரைத்து விரட்டி, சிலசமயம் காப்பதாகவும், பலசமயங்களில் குரைத்தே தங்கள் இடங்களைக் காட்டிக்கொடுத்து ஆபத்தை விளைவிப்பதாகவும் கூறுகிறார்கள். • பெரும்பாலான விவசாயிகள் தங்கள் நிலங்களை அரசாங்கத்திற்கு விட்டுக்கொடுப்பதில் தயக்கம் காட்டுகிறார்கள். மூன்று தலைமுறைகளாக இருக்கிறோம் எப்படிங்க செல்வது என அங்கலாய்க்கிறார்கள். • ஐயப்ப சீசனையொட்டி கேரள வனப்பகுதிகளில் வெடி போடுவதால் கார்த்திகை, மார்கழி போன்ற மாதங்களில் யானைகள் வரத்து அதிகமுள்ளதாய்க் கூறுகிறார்கள். • லோயர் காம்ப், அனுமந்தம்பட்டி, புதுப்பட்டி, கூடலூர் கோம்பை வரை கால்வாய்கள் உள்ளதாலும், இந்தக் கால்வாய்களே அரணாக இருப்பதாலும் யானை வரத்து இல்லை என்கிறார்கள் அருகிலிருக்கும் கிராமவாசிகள்.

Tuesday, January 31, 2012

எறும்புகள்



பூச்சிகள்

இப்புவி பசுமையாய் இருப்பதற்கும், தாவரங்கள் பூத்துக் குழுங்கி, காய்களையும், கனிகளையும் நமக்கு கொடையாய் கொடுப்பது என எல்லாமுமாய் நமக்குத்தருவது பூச்சிகள் என்றால் நாம் நம்பித்தான் ஆகவேண்டும். அயல் மகரந்தச்சேர்க்கை மூலம் தாவரங்கள் இனவிருத்தி செய்ய உதவுவது பூச்சிகளே. இப்படி இப்புவியில் பூச்சிகளின் பங்கு மெச்சத்தக்கது. ஆனாலும், பூச்சிகளில் நன்மை செய்வன போல் தீமை செய்யும் பூச்சிகளும் உண்டு. பயிர்களை நாசம் செய்வதிலிருந்து, நோய் பரப்பும் கிருமிகளை பரப்புவது வரை அனைத்து மோசமான செயல்களை செய்வதும் பூச்சிகளே.
பூச்சிகள் எண்ணற்றவை. இப்புவியின் எண்ணற்ற உயிரினங்கள் பூச்சியினங்களே. பூச்சிகள் இல்லாத உலகத்தை நம்மால் கற்பனை செய்யக்கூட முடியாது. பூச்சிகள் கணுக்காலிகள் என்ற தொகுதியை சார்ந்தது. ஆறு கால்கள் உள்ளவையெல்லாம் பூச்சிகளே. உண்மையில் எட்டுக்கால் பூச்சிகள் பூச்சிகளே அல்ல. உலகின் உயிரினங்களில் ஐந்தில் ஒரு பங்கு பூச்சியினங்களே. அவற்றில் பல்லாயிரக்கணக்கான பூச்சியினங்கள் உண்டு. இன்னும் கண்டுபிடிக்காத பூச்சியினங்கள் கண்டுபிடித்தவைகளைவிட ஒரு மடங்கு அதிகமே. பூச்சிகள் அனைத்து இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும். சாக்கடையில் ஆரம்பித்து நல்ல தண்ணீர் வரையிலும், பனிப்பகுதியிளிருந்து வெப்பப்பகுதி வரையிலும் குகைகள், மலைகள், பள்ளத்தாக்குகள், ஓடைகள், நதிகள், புல்வெளிகள், காடுகள், பாலைவனங்கள், வயல்வெளிகள் என பார்க்கும் ஒவ்வொரு இடத்திலும் பூச்சிகள் நீக்கமற நிறைந்திருக்கும். இப்படிப்பட்ட பூச்சிகளின் வகைகள் பற்றி அறியலாம்.

எறும்பு

எறும்புகள் தனித்து வாழ்வதில்லை. ஒவ்வொரு எறும்பும் தனக்கிட்ட வேலையை செய்து முடிக்கும் திறன் கொண்டது. பெரும்பாலான எறும்புகள் பெண் வேலைக்கார எறும்புகளே. பெரிய குழிகளையும், எறும்புப்புற்றினையும் கட்டும் வல்லமை மிக்கவை அதோடு உணவு சேகரிப்பு, இளம் எறும்புகளுக்கு உணவு ஊட்டுவது, தனது கூட்டினை பாதுகாப்பது என பலவிதமான வேலைகளை செய்ய வல்லது. ராணுவ எறும்புகள், தச்சன் எறும்புகள், இலை வெட்டும் எறும்புகள் என பல ஆயிரக்கணக்கான சிற்றினங்கள் உண்டு.
தாவரங்களுக்கும், எறும்புகளுக்குமிடையே பரஸ்பர உறவு உண்டு. சில தாவரங்கள் இனிப்பான திரவங்களை சுரக்க வல்லது. அதை அருந்துவதற்கென்றே எறும்புகள் அத்தாவரம் சார்ந்திருக்கும். தனக்கு உணவு கொடுக்கும் தாவரங்கள் வளர்வதற்கு ஏதுவாக அருகில் வளரும் பிற தாவரங்களை முளையிலேயே வெட்டி எரிந்து வளர விடாமல் செய்துவிடும். அதேபோல சில பூச்சியினங்களுடன் சுமுக உறவைக்கொண்டிருக்கும். மாடு (cow bug) என பரவலாக அழைக்கப்படும் பூச்சிகளுடன் எரும்புகளுக்கான தொடர்பும் அவ்வாறே. மாடுகள் தாவங்களை உண்டு இனிப்பான திரவத்தை சுரக்கும். அவற்றை எறும்புகள் உண்ணும். மாறாக எதிரிகளிடமிருந்து மாடுகளை காப்பாற்றும். எறும்புகள் அநேகமாக எல்லா கரிமங்களையும் உண்ண வல்லது. இலைகள், பூஞ்சைகள், சிலந்திகள், புழுக்கள், அனைத்து வகையான பூச்சிகள், ஏன் மற்ற இனத்தை சார்ந்த எறும்புகள் என ஒன்றையும் விட்டு வைப்பதில்லை.

Sunday, January 29, 2012

திருநங்கைத்தவளைகள்



சின்சினாட்டி பல்கலை கழக ஆராய்ச்சியாளர்கள் அற்றாஜின் என்ற பூச்சி மருந்துகளின் தாக்கத்தினால் ஆண் தவளைகள் பெண் தவளைகளாக மாறுவதாக கண்டுபிடித்திருக்கிறார்கள். அப்படி மாறிய தவளைகள் சாதாரண ஆண் தவளைகளோடு கலவி செய்து வீரியமுள்ள முட்டைகள் இடுகின்றன. ஆனால் ஆண் தவளைகள் அதனுடைய ஆண் தன்மையை இழந்து விடுவதாகவும், சுரப்பிகளின் அளவு குறைந்து விடுவதாகவும் இறுதியில் அர்த்தனாரித்தவளைகள் ஆகின்றன என்றும் கூறுகிறார்கள். மீன்களில் ஆராய்ச்சி செய்து பார்த்ததில், விந்துகளின் எண்ணிக்கை குறைந்து காணப்படுவதாகவும், ஓனான் போன்ற ஊர்வனவற்றில் ஆராய்ச்சி செய்து பார்த்ததில் அதே போன்ற முடிவுகளேகிடைத்திருப்பதாகவும் கூறுகிறார்கள்.
சற்று யோசித்துப்பாருங்கள்!

தொடர்ச்சியாக நாமும் பூச்சி மருந்துகளின் தாக்கத்திற்க்குள்ளாகும்போது, நம்மில் என்னென்ன மாற்றங்கள் நிகழலாம்?

திருநங்கைகளுக்கும், ஆண்களுக்கும் அல்லது பெண்களுக்கான மரபணுக்களில் பெரிய மாற்றமெல்லாம் இல்லை. AR gene என்றழைக்கப்படும் ஆண்ட்ரோஜென் ரிசப்டார் ஜீன் தான் காரணம் என்கிறார்கள். குரோமோசோம்களின் எண்ணிக்கையில் மாற்றம் இல்லை ஆனால் மரபணுக்களில் தான் சில மாற்றங்கள். இன்று தவளையில் ஏற்பட்டிருக்கிற மாற்றங்கள் மனித குலத்திற்கும் நிகழலாம். சற்றே யோசிப்போம்!