இந்தியாவிலேயே மிக நீளமான கற்கரை, 13 கடற்கரை மாவட்டங்கள், 442 மீன்பிடி கிராமங்கள், 362 மீன் இறக்கப்படும் தளங்கள், 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள், சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட நேரடி மீன்பிடித் தொழிலாளர்கள், ஆயிரக்கணக்கான இயந்திரப் படகுகள், பல்லாயிரக்கணக்கான பல்லாயிரக்கணக்கான மோட்டார் பொருத்தப்பட்ட மற்றும் பொருத்தப்படாத கட்டுமரங்கள் மற்றும் வல்லங்கள் 14 வகைத் துடுப்பு மீன்கள் 3 மேலோட்டுக் கணுக்காலிகள் என அனைத்து வளங்கள் இருந்தும் தமிழக மீனவர்களின் நிலை பரிதாபகரமானதாகவும், உயிர்ச் சேதங்கள் நிறைந்ததாகவும், பாதுகாப்பற்றதாகவும் உள்ளதே ஏன் !
இந்திய - இலங்கை கடல் எல்லைப் பிரச்சனை, மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு, வலைகளை அறுத்து மீனவர்களை அடித்து விரட்டிய இலங்கை கடறப்டையினர் என்று தினமும் ஏராளமான செய்திகளை அநேகமாக அனைத்து ஊடகங்களும் வெளியிட்டுவிட்டன. ஆனாலும் மீனவர்கள் பாடுதான் விடிந்தபாடில்லை!
ஏன் இவர்களுக்கு இந்த அச்சறுத்தல்!
இதற்கெல்லாம் காரணம்தான் என்ன?
விடை தேடலின் போது கிடைத்த விஷயங்கள் ஒன்று இயற்கை சார்ந்தது, பிரிதொன்று இலங்கைக் கடற்படை சார்ந்தது.
காற்றின் வெப்பநிலை கூடக்கூட கடல் நீரின் அடர்த்தி குறைந்து நீரில் கரைந்துள்ள உணவுப் பொருட்கள் ஒரு படிமமாக கீழே தனியொரு அடுக்காக உருவாகி விடுகிறது. அதனால் கடல்வாழ் உயிரினங்களுக்கப் போதுமான உணவு கிடைக்காமல் போவதற்கு வாய்ப்பிருக்கிறது. உதாரணமாக, நீரின் மேல்பரப்பில் வாழக்கூடிய தாவர மிதவை உயிரிகளுக்கும், சில வகை பாசிகளுக்கும் கிடைக்கக்கூடிய உணவுப் பொருட்கள் மேல் நோக்கி வருவது புவி வெப்பமடைதலால் தடைபடுகிறது. இதனால் இவ்வுயிரிகள் வெப்பமான கடல் பகுதிகளில் வாழ்வது குறைந்து விடுகிறது. இவ்வுயிர்கள்தான் உணவுச் சங்கியின் அடிப்படை உயிர்கள். இவை அதிகமாக வாழ்ந்தால் தான் இவ்வுயிர்களை நுகரும் கடல் வாழ் உயிரினங்கள் உயிர் வாழ முடியும். இது உணவுச் சங்கிலி அறுபட ஏதுவாகிறது.
புவி வெப்பமடைதலின் பொருட்டு ஏற்படும் கடலின் அமிலத்தன்மை, பவளப்பாறைகளுக்கு பெரும் கேடு விளைவிக்கிறது. அதன் விளைவாக பவளப் பாறைகளின் மத்தியில் இனப் பெருக்கம் செய்யும் மீன்கள் வாழ ஏதுவான சூழல் அமைவதில்லை. அதன் பொருட்டு மீன் உற்பத்தி குறைகிறது.
சுமார் 550 லட்சம் வருடங்களுக்கு முன்னதாக கடல் அமிலத் தன்மை மிகுந்ததாகக் காணப்பட்டது. அதன் விளைவாக பெரும்பாலான உயிரினங்கள் அழிந்து போயின. அந்த நிலை மாறுவதற்கு ஏறத்தாழ்வு 1 லட்சம் வருடங்கள் ஆனதாகவும், அதன் பிறகே கடல் வாழ் உயிரினங்கள் வாழும் சூழல் ஏற்பட்டதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
அதுபோன்ற ஒரு நிலைக்கு நாம் நம் கடல் பகுதிகளை தள்ளிக்கொண்டிருக்கிறோம். இன்று மனித நடவடிக்கைகளால் மறுமுறை கடல் அமிலத்தன்மையை அடைந்திருக்கிறது. இது நிச்சயம் பல உயிரினங்களை காவு கொள்ளத்தான் போகிறது.
அடுத்த அச்சுறுத்தல் ட்ராலர்கள் என்றழைக்கப்படும் பெரிய மீன்பிடிப் படகுகள். இப்படகுகளில் பயன்படுத்தப்படும் இரட்டை மடி வலைகள், பெரிய மீன்களுடன், நாளைய பெரிய மீன்களான சிறு சிறு மீன்கள் மற்றும் அதற்கான உணவு உயிர்களையும் வழித்து எடுத்து விடுவதால், வருங்கால மீன் வளக் குறைவு, சிறு படகுகள் மற்றும் வல்லங்களில் சென்று மீன் பிடிக்கும் மீனவர்களை பாதிக்கிறது.
இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை தாக்குவதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஏதோ வகையில் விடுதலைப்புலிகளடன் தொடர்பு வைத்திருப்பார்களோ! அல்லது உதவுகிறார்களோ? என்ற தவறான அச்சம் ஒரு புறம் இருக்க, இலங்கை மீனவர்களும் இந்த கடல் பகுதியை சார்ந்த வாழ்வாதாரங்களை நம்பியே பிழைக்கிறார்கள். இந்திய - இலங்கை கடல் வளங்கள் இரண்டு நாட்டுக்கும் பொதுவானவை என்ற ஒப்பந்தங்களும் உண்டு. 1984- வரை ஓரளவு ஒப்பந்தங்கள் காப்பாற்றப்பட்டே வந்திருகிறது. அதன் பின்னர் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் காரணமாக மீன் வளங்களை கையகப்படுத்துவதில் தகராறு ஆரம்பித்திருக்கிறது. இரு நாடுகளின் முன்பிடி படகுகளை ஒப்பிட்டோமேயானால், கிட்டத்தட்ட இலங்கையை விட நான்கு மடங்கு ட்ராலர்கள் நம்மிடம் உண்டு. அதனால் இயல்பாகவே நாம் தான் அதிக அளவில் அனுபவிக்கிறோம் என்ற கருத்து உலவுவதால் இலங்கை கடற்படையினர் அடித்து விரட்டுவதற்கும், நம்மை வளங்களை சூறையாடுபவர்களாகப் பார்ப்பதற்கும் வாய்ப்பிருக்கிறது. பருவநிலை மாற்றம், அதீத மீன்பிடி படகுகளை பயன்படுத்தி மீன் பிடித்தல், தொழிற் சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகள், எரிசக்தி உற்பத்திக் கழிவுகள் எல்லாவற்றிற்கும் மேலாக புவி வெப்பமடைதல் என அனைத்துக் காரணிகளும் கடலின் ஆரோக்கியத்திற்கும் அது சார்ந்த உயிர்களுக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கிறது.
இயல்பாகவே நீடித்த, நிலைத்த முறையான உணவுச் சங்கிலியின் உதவியால் தொழிற்புரட்சிக்கு முன்னும், அதிக மக்கள்தொகை பெருக்கத்திற்கும் முன்பும், கடல் இயல்பான தன்மையோடும், தனக்கேயுரிய வளங்களோடும் கடலை நம்பியுள்ள மீனவ குடும்பங்களுக்கு போதிய வாழ்வாதாரத்தைக் கொடுத்தும் வந்திருக்கிறது. ஆனால் மனிதனால் ஏற்படுத்தப்பட்ட புவி வெப்பமடைதலுக்குப் பின் கடல் சீற்றமும், கடல் வளக்குறைவும், அதன் பொருட்டு ஏற்பட்ட இயற்கை வள அழிவும், பருவநிலை மாற்றமும், மழை பொய்த்தலும், மிகவும் கவலை அளிக்கக் கூடிய செயலாக அமைகிறது.
இனியாவது விழித்துக்கொள்ளவோம்!
புவி வெப்பமயமாதலை இயன்ற அளவு குறைப்போம்!
No comments:
Post a Comment