Tuesday, May 15, 2012
யானைகள் - மனிதர்கள் ஒத்திசைந்து வாழ்தல் குறித்த ஒரு பார்வை - Dr. S. தினகரன்
வலசை செல்லும் பாதைகளில் உள்ள விவசாய நிலங்களும், எஸ்டேட்டுகளும் தான் யானைகளால் பரவலாக பாதிக்கப்படுகின்றன. யானைகளும் மனிதர்களும் ஒத்திசைந்து ஒரே இடத்தில் வாழும் சாத்தியக்கூறுகளை உருவாக்கும் முயற்சிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருப்பினும் பயத்தோடும், ஒருவித மரியாதையோடும் தான் அங்கு வாழும் மக்கள் இருக்கிறார்கள். மற்ற நாடுகளைபோல் அல்லாமல் நமது நிலப்பரப்பு குறைவு ஆனால் இருப்பிட வசதி என்பது வனவிலங்குகளுக்கும் சரி, மனிதனுக்கும் சரி போதுமானதாய் இல்லை.
வன விலங்குகளுக்கு அதற்கான வாழும் சூழலைத்தரவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். ஒரு நாட்டில் 33 சதவீதத்திற்கும் குறைவாக காடுகள் இருக்கும்பட்சத்தில், அந்த நாட்டை வளமான நாடாக கருத முடியாது. இந்தியாவில் சுமார் 19.4 சதவீதம் தான் காடுகள் உள்ளன.
அதேவேளையில், இருக்கும் வனவிலங்குகளை எவ்வாறு பாது காப்பது? அதற்கான வாழும் சூழலை எப்படி உருவாக்குவது? மனித-வனவிலங்குகளுக்கிடையேயான முரண்களை களைவது எப்படி? என்று நம்முன் ஏராளமான கேள்விகள் நிற்கின்றன.
உதாரணமாக, யானைகளால் மனிதர்களுக்கு ஏற்பட்ட இழப்புகளும், மனிதர்களால் யானைகளுக்கு ஏற்பட்ட இழப்புகளும் உற்று கவனிக்கப்பட வேண்டியவை. இவர்களுக்கிடையேயான முரண்களை களையும் அவசியமும் இருக்கிறது. ஏனென்றால், யானை, வனச்சூழலில் ஒரு முக்கியமான விலங்கு. வன ஆரோக்கியத்தின் கண்ணாடி. உணவுச்சங்கிலியின் ஒரு முக்கியச்சரடு. யானைகளின் இழப்பு, யானைகளை மட்டும் பாதிப்பதில்லை அந்த வனத்தின் ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது.
இது குறித்து ஆராய்ச்சி செய்வதற்காக ஒரு எட்டு பேர் அடங்கிய குழு ஒன்று நேதாஜி பாம்புகள் அறக்கட்டளை சார்பாக மே மாதம் இரண்டாம் வாரத்தில் யானைகள் அதிகம் வலசை செல்லும் பகுததிகளில் உள்ள முக்கியமான மலைக்கிராமங்களான மணலாறு, மேலமணலாறு ஆரம்பித்து கூடலூர் வரையிலான தொழு, எள்ளுக்கட்டுப்பாறை, மூணாண்டிபட்டி, வெட்டுப்பட்டி போன்ற கிராமங்கள் வரை ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.
ஆய்வுகளின் நோக்கம், யானைகளை அப்பகுதி மக்கள் எவ்வாறு புரிந்து வைத்திருக்கிறார்கள்? தப்பிப்பதற்கு என்னென்ன முறைகளை கையாளுகிறார்கள்? யானைகள் மத்தியில் வாழும் சூழல் எவ்வாறு இருக்கிறது? என்பது உள்ளிட்ட சுமார் 50 கேள்விகளை அவர்கள் முன்வைத்து அதற்கான பதில்களும், பெற்றோர்கள், ஆசிரியர்கள், குழந்தைகள் உள்பட அனைவரின் கருத்துக்களும் பதிவு செய்யப்பட்டது.
ஆய்வுகளின் முக்கியமான சாரங்களாக கீழே வருவன தொகுக்கப்பட்டிருக்கிறது:
• யானைகளால் கொல்லப்பட்டவர்களில் அநேகம்பேர் இரவுக்காவலுக்காக யானை வலசை செல்லும் பாதைகளிலுள்ள பட்டா நிலங்களில் விவசாயக்காவல் செய்வதற்காக அங்கே தங்கியிருக்கும் சமயத்தில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். யானை பயத்தின் காரணமாக, தேவாரத்திற்கு அருகிலுள்ள பல கிராமங்களில், குறிப்பாக பிரம்புப்பட்டி, இரவுக்காவலுக்கு செல்வது முற்றிலும் நின்றுவிட்டது. பகலில் மட்டுமே விவசாயப்பணிகளை மேற்க்கொள்கிறார்கள்.
• அங்குள்ள பலருக்கு தமக்கு இங்கு வாழ எவ்வளவு உரிமை உள்ளதோ அதே உரிமை யானைகளுக்கும் இருக்கிறது என்பதை உணர்ந்திருக்கிறார்கள். யானைகள் பாதுகாப்பு பற்றிய சட்டங்கள் இருப்பதையும் அறிந்து வைத்திருக்கிறார்கள்.
• யானைகளால் ஏற்பட்ட பயிர்ச்சேதங்களுக்கு அரசாங்கத்திடமிருந்து தக்க உதவித்தொகை தங்களுக்கு கிடைக்கவில்லை என்ற மனக்குறையோடு இருக்கிறார்கள்.
• யானைகளை விட பன்றிகளாலும், சிறுத்தைகளாலும் தான் தொல்லைகள் அதிகமுள்ளதாகக் கூறுகிறார்கள்.
• வனத்துறையிலிருந்து காடுகளில் விடப்படும் வனவிலங்குகள் குறித்த அச்சம் பரவலாகத்தென்படுகிறது.
• ஹைவேவிஸ் மலைக்கிராமங்களில், அம்மலையின் தேயிலைத்தோட்ட நிர்வாகமே யானைகள் ஏற்படுத்திய சேதங்களை சரிசெய்து கொடுத்து விடுவதால் அவர்கள் பெருங்கவலை கொள்வதில்லை. தாங்களே விவசாயம் செய்து கொள்ளும் மக்கள் மட்டுமே இது பற்றி கவலை தெரிவிக்கிறார்கள்.
• மலைக்கிராமங்களில் உள்ள பள்ளிகளில் பெரும்பாலான ஆசிரிய, ஆசிரியைகள் அந்தந்த கிராமங்களில் தங்குவதில்லை அருகிலுள்ள நகரத்திலிருந்தே வருகின்றனர். பெரும்பாலான குழந்தைகள் வெளியூருக்குச் சென்றே கல்வி பயில்கிறார்கள்.
• வனம் சார்ந்த குற்றங்கள் ஓரளவிற்கு குறைந்துள்ளதாகத் தெரிவிக்கிறார்கள். 2004 ஆம் ஆண்டு வரை யானைகள் தந்தங்களுக்காக சுடப்பட்ட சம்பவங்கள் நடந்திருப்பதாகவும் இப்போது மிகவும் குறைந்துள்ளதாகவும் கூறுகிறார்கள்.
• வனக்குற்றங்களில் ஈடுபட்ட சுமார் 26 முன்னாள் குற்றவாளிகளைக் கொண்ட “விடியல்” என்ற அமைப்பை கேரளா வனத்துறை கூடலூரில் இயக்கி வருகிறது. இவர்கள் சந்தன மரங்கள் வெட்டுவதையும், வனவிலங்குகளை வேட்டையாடுவதையும் கண்காணிக்கிறார்கள். கூடவே வெளிநாட்டுப் பயணிகளை மாட்டு வண்டிகளில் வைத்து விவசாய நிலங்களை சுற்றிக்காட்டுகிறார்கள். சமீபத்தில் ஏற்பட்ட முல்லை-பெரியாறு விவகாரத்தில் விடியல் அலுவலகத்தை முற்றாக சிதைத்திருக்கிறார்கள் கலவரக்காரர்கள்.
• யானைகளால் கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பெண்கள். ஆண்களும் உண்டு ஆனால் குறைந்த சதவீதமே.
• யானைகளிடமிருந்து தங்களை பாதுகாக்க அகழி அமைத்து அதில் வசிக்கிறார்கள் அல்லது பெரிய மரங்களில் மாடமோ அல்லது பரணோ அமைத்து அதில் தங்கிக்கொள்கிறார்கள்.
• படாங் மற்றும் வான வெடிகள் வெடித்து யானைகளை விரட்டுகிறார்கள். இவை எதுவும் இல்லாத பட்சத்தில் எண்ணை டின்களையும், கதவுகளையும், ஜன்னல்களையும் தட்டி ஓசை எழுப்பி விரட்டுகிறார்கள் அல்லது மலையாளத்திலோ, தமிழிலோ நாங்கள் எல்லாம் பிழைக்க வந்திருக்கிறோம் எங்களை ஒன்றும் செய்யாமல் போய்விடுங்கள் என்று இறைஞ்சுவதாகக் கூறுகிறார்கள். கூக்குரல்களை யானைகள் விரும்புவதில்லை, எரிச்சல் பட்டு தங்களை நோக்கி வர வாய்ப்புள்ளதாக பயப்படுகிறார்கள்.
• காவலுக்குள்ள நாய்கள் குரைத்து விரட்டி, சிலசமயம் காப்பதாகவும், பலசமயங்களில் குரைத்தே தங்கள் இடங்களைக் காட்டிக்கொடுத்து ஆபத்தை விளைவிப்பதாகவும் கூறுகிறார்கள்.
• பெரும்பாலான விவசாயிகள் தங்கள் நிலங்களை அரசாங்கத்திற்கு விட்டுக்கொடுப்பதில் தயக்கம் காட்டுகிறார்கள். மூன்று தலைமுறைகளாக இருக்கிறோம் எப்படிங்க செல்வது என அங்கலாய்க்கிறார்கள்.
• ஐயப்ப சீசனையொட்டி கேரள வனப்பகுதிகளில் வெடி போடுவதால் கார்த்திகை, மார்கழி போன்ற மாதங்களில் யானைகள் வரத்து அதிகமுள்ளதாய்க் கூறுகிறார்கள்.
• லோயர் காம்ப், அனுமந்தம்பட்டி, புதுப்பட்டி, கூடலூர் கோம்பை வரை கால்வாய்கள் உள்ளதாலும், இந்தக் கால்வாய்களே அரணாக இருப்பதாலும் யானை வரத்து இல்லை என்கிறார்கள் அருகிலிருக்கும் கிராமவாசிகள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment