Friday, November 18, 2011

அணுசக்தி ஆராய்ச்சியும் ஜீனிய ஆராய்ச்சியும்



அணுசக்தி தயாரிப்பதற்கான கச்சாப் பொருட்கள, கட்டுமானம் அது சார்ந்த செலவுகள் போன்றவை அனைத்து நாடுகளாலும் செயல் படுத்த முடியாத ஒன்று. சில நாடுகளே அது சார்ந்த வசதிகளும், தொழில்நுட்ப திறன்களும் கொண்டிருக்கின்றன. ஆனால் அணு சக்தி உற்பத்தி என்ற பெயரிலும், தேசிய பாதுகாப்பு என்ற பெயரிலும் நடத்தப்படும் அணுசக்தி ஆராய்ச்சிகள் பெரும்பாலும் மறைமுகத்தன்மை வாய்ந்ததே.

அணுசக்தி ஆய்வில் மக்களிடம் மறைக்கப்பட்ட உண்மைகள் பல. குறிப்பாக, அமெரிக்கா எதிர்நோக்கியிருக்கும் ஆபத்து - 17 அணு ஆயுதக்கிடங்கிலிருந்து கசிந்து வரும் அணுக்கதிர் வீச்சும், அதை சரி செய்ய தேவைப்படும் 200 பில்லியன் டாலர்களும். பொருளாதாரத் தேவைகள் தவிர, அணுசக்தி ஆய்வினால் ஏற்பட்ட மனித பாதிப்புகள் விலை மதிப்பிட முடியாதவை. 1940 ளிலிருந்து நடத்தப்பட்டு வரும் 20,000க்கும் மேலான மனிதர்கள் மீதான ஆய்வுகள் முறையே, அப்பாவி நோயாளிகளின் ரத்த நாளங்களில் ஏற்றப்பட்டு வரும புளுட்டோனியம், அதிக மக்கள் தொகை கொண்ட, குறிப்பாக கர்ப்பிணி பெண்களின் மீது மேற்கொள்ளப்படும் கதிரியக்க சோதனைகள் என கொடூரங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன.

அணுசக்தி ஆராச்சியைப் போன்றே, உயிரித்தொழில் நுட்பம் என்ற பெயரில் ஜீனியங்களில் நடத்தப்படும் ஆய்வுகளும் மோசமான விளைவுகளையே கொணர்ந்திருக்கிறது. தாவரங்களின் ஜீன்களையும் விலங்குகளின் ஜீன்களையும் விருப்பம் போல மாற்றியமைக்கும், ஜீனிய ஆராய்ச்சிகளுக்கு, அணுசக்தி போலில்லாமல், சில லட்சங்கள் போதும். கொஞ்சம் செலவு, அதிக வருமானம் என ஜீன்களையும் விருப்பம் போல மாற்றியமைக்கும், உயிரித்தொழில்நுட்பம் உலகை புரட்டிப்போடப்போகிறது. க்யுபா போன்ற ஏழை நாடுகளே இது போன்ற ஆராய்ச்சிகளில் ஈடுபட ஆரம்பித்திருக்கிறது.

இந்த இரண்டு ஆராய்ச்சிகளுமே மனித குலத்திற்கு பயன்படப்போகிறது என்றாலும் கூட, ஆதரவாளர்களாலும், எதிர்ப்பாளர்களாலும் எழுப்பப்படும் கேள்விகள் இவை தான்:

• மனிதப்பிழைகளால் (ஆராய்ச்சியாளர்கள் மற்றும் செயல்படுத்தும் பணியாளர்கள்) ஏற்படும் பேராபத்திற்கு என்ன பதில்?
• கட்டமைப்புக் கோளாறுகள் அல்லது குறைபாடுகள் குறித்த சந்தேகங்கள்
• போதுமான சோதனைகள் மேற்கொள்ளாமல் திட்டங்களை செயல்படுத்தும் எதேச்சதிகாரப்போக்கு

நீடித்த நிலைத்தன்மை கொண்ட ஆராய்ச்சிகளே இந்த பூமிக்கு நல்லது. அவசர கதியில் நிகழ்த்தப்படும் அனைத்து ஆராய்ச்சிகளுமே கேள்விக்குரியவைதான். திட்டங்கள் நிறைவேற்றப்படுவதற்கு முன் அது குறித்தான ஆழ்ந்த ஆராய்ச்சிகளும், நிறைய கேள்விகளும், ஆரோக்கியமான விவாதங்களும், மக்களின் நம்பிக்கைத்தன்மையும் முக்கியம். இதில் எது குறைந்தாலும் தோல்வியே.
அணு ஆராய்ச்சி, ஜீனிய ஆராய்ச்சியை விடுங்கள். இயற்க்கைச்சூழலை மாற்றியமைக்க முயன்றால் கூட பாதிக்கபோவது நமது மக்களும், பொருளாதாரமும் தான். உதாரணமாக, 1957-களில், ஐரோப்பா தேனீக்களுக்கு மாற்றாக, ஆப்ரிக்க தேனீக்களை பிரேசிலில் அறிமுகப்படுத்தினார்கள்.

பொதுவாக ஐரோப்பிய தேனீக்கள் தேன் அதிகமாகக்கொடுக்கும். ஆனால் பிரேசிலின் தினச்சுழற்சிக்கு அனுசரித்து போகமுடியாததால் மாற்றாக ஆப்ரிக்க தேனீக்களை (ஏபிஸ் மெல்லிபெரா ஆடன்சொனி ச்ருடெல்லா ) அறிமுகப்படுத்தினார்கள். அப்போது ராணித் தேனீயோடு தப்பித்த வேலைக்காரத் தேனீக்களை கட்டுப்படுத்த முடியாமல் ஆயிரக்கனக்கானோர் கொட்டுவவது தாங்காமல் இறந்து போயினர். கொலைகாரத் தேனீ என்றே அவைகளுக்கு பெயர் ஏற்ப்பட்டது. பல லட்சம் டாலர்களையும் இழந்தனர். அதுமட்டுமல்லாமல், சுமார் இருபதாயிரம் கிலோ மீட்டர் பரப்பளவிற்கு அதன் எல்லைகள் விரிவடைந்து விட்டது. எண்ணிக்கையும் பல மடங்கு உயர்ந்து விட்டது. இதை விட பெரிய உதாரணம் தேவையில்லை.

No comments: