Sunday, January 29, 2012

இந்தியாவின் உயிரித்தொழில்நுட்ப ஒழுங்காற்றுதல் - யாருக்காக? யாரால்?



பரிணாம் வளர்ச்சி என்பது ஒரு உயிரியில் ஏற்படும் மரபணு மாற்றங்கள், இயற்கையினால் தெரிவு செய்யப்பட்டு, மற்றொரு உயிரியாக பரிணமிப்பதாகும். இவ்வாறு தோன்றியவை தான் இன்று உலகெங்கிலும் விரவியுள்ள சிற்றினங்கள். அதற்கு சுமார் 350௦ கோடி ஆண்டுகள் ஆனது. சுமார் 150௦ ஆண்டுகளுக்கு முன்பே டார்வின் தனது பரிணாமக் கோட்பாடுகளில் இது பற்றி குறிப்பிட்டிருக்கிறார். மரபணு மாற்றம் செய்யப்படும் உயிர்களின் ஆதாரத்தொழில்நுட்பமும் இதுதான். இயற்கையாக மரபணுக்களில் ஏற்படும் மாற்றம் தற்செயலானது. ஒரு உயிரி, மற்றொரு உயிரியாக பரிணமிக்க பல நூற்றாண்டுகள் ஆகும். ஆனால் உயிரித்தொழில்நுட்பத்தில் இது சாதாரணம். சில நூறு நாட்கள் போதும். அனைத்தும் சாத்தியமே.

முன்னெச்செரிக்கைத்தத்துவம்:

அமெரிக்காவின் உணவு, மருந்து மற்றும் ஒப்பனைப்பொருள் சட்டம் என்ன சொல்கிறதென்றால், உணவுப்பொருட்களுடன் சேர்க்கப்படும் எந்தவொரு கூடுதல் பொருளும், ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டும். ஆராய்ச்சிகளின் முடிவில், மனிதனுக்கோ, அல்லது ஆய்வு விலங்குகளுக்கோ சோதனை செய்து , புற்று நோய் வருவதற்கான அறிகுறிகள் தெரியும் பட்சத்தில், அதற்குத்தடை விதிக்க வேண்டும். அமெரிக்காவின் பல சட்டங்கள் இதற்கு வலு சேர்த்துள்ளன. உதாரணமாக, சுற்றுச் சூழல் பாதுகப்புச்சட்டம், சுத்தமான குடிநீர்ச்சட்டம், தூய காற்றுச்சட்டம் என அனைத்துச்சட்டங்களும் முன்னெச்சரிக்கைத் தத்துவம் சார்ந்ததாகவும், தடை விதிக்க ஏதுவாகவும் உள்ளது. வேறெந்த நாடுகளையும் விட அமெரிக்கா இதில் கவனமாக இருக்கிறது.

1960 - களிலிருந்து 80௦ வரை உயிரித்தொழில்நுட்பத்தின் மூலம் பெறப்பட்ட அல்லது உருவாக்கப்பட்ட உணவுப்பொருட்களின் மீதான கட்டுப்பாடு குறித்து அமெரிக்காவும், ஐரோப்பாவும் வெவ்வேறு கருத்துகள் கொண்டிருந்தன. ஆனால் தற்போது அமெரிக்காவை விட ஐரோப்பாவில் சட்டங்கள் கடுமையாக்கப்பட்டுள்ளன.

அமெரிக்காவில் உயிரித்தொழில்நுட்பம்:

வெள்ளை மாளிகையால் நிறுவப்பட்ட, வேலைக்குழு, மற்ற அமைப்புகளுடன் கலந்தாலோசித்து உயிரித்தொழில்நுட்ப ஒழுங்காற்று ஒருங்கிணைவுக்கூட்டமைப்பு (CFRB) என்ற அமைப்பை ஏற்படுத்தியது. அதன்படி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனமும் (EPA), ஐக்கிய நாடுகள் வளர்ச்சி நிறுவனமும் (USDA) மற்றும் உணவு மற்றும் மருந்து நிர்வாகமும் தான் உயிரித்தொழில்நுட்பதை நெறிபடுத்தும் முதன்மை அமைப்பாக இருந்து வருகிறது.
உயிரித்தொழில்நுட்பத்தின் மூலம் விளைவிக்கப்பட்டதா? அல்லது உருவாக்கப்பட்டதா? என்ற கேள்வி வரும்போது, விளைவிக்கப்பட்ட உணவுப்பொருட்களுக்கு விவரக்குறிப்பு (labeling) தேவையில்லை என்று இந்தக்கூட்டமைப்பு தெரிவித்திருந்தது. உதாரணமாக, நீடித்து இருக்கக்கூடிய, மரபணு மாற்றம் செய்யப்பட தக்காளியையும், இயற்கையாக விளைந்த தக்காளியையும் குறிப்பிடலாம். இதில் இரண்டுமே கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருப்பதால் விவரக்குறிப்பு தேவையில்லை என அறிவிக்கப்பட்டது.
2000- வது ஆண்டு மே மாதம் அமெரிக்காவின் தேசிய விக்ஞானக் கழகம் உயிரித்தொழில்நுட்பத்தின் மூலம் செருகப்பட்ட ஜீனியங்கள் அவ்வளவு அபாயகரமானதல்ல என்ற கருத்தை முன்வைத்தது. இம்முடிவு, உயிரித்தொழில்நுட்ப விளைபொருட்களின் அளவை 15 மடங்காக அதிகரித்தது.

தற்போது, அமெரிக்காவில் பயிரிடப்படும் 50 சதவீத சோளமும், பருத்தியும் மரபணு மாற்றம் செய்யப்பட்டவையே. 1999 ஆம் ஆண்டில் மட்டும் மளிகைக்கடைகளில் விற்பனை செயப்பட்ட விளைபொருட்கள் 60 சதவீதம் இவ்வாறு மரபணு மாற்றம் செய்யப்பட்டவையே. ஆனால் 33 சதவீத மக்களுக்கு இது பற்றிய விழிப்புணர்வு இருந்தபோதிலும் 3 சதவீத மக்கள் மட்டுமே தாங்கள் வாங்கும் சோளம் மரபணு மாற்றத்திற்கு உட்பட்டவையே என்று அறிந்து வைத்திருந்தார்கள். அது மட்டுமல்லாமல், 1970-ல் அடக்கி வைக்கப்பட்டிருந்த உயிரித்தொழில்நுட்பம் 2000 வது ஆண்டிற்கு மேல் விவசாய மற்றும் ஆரோக்கிய உயிரிதொழில்நுட்பத்தால் தழைத்தோங்க தொடங்கியது.

ஐரோப்பாவில் உயிரித்தொழில்நுட்பம்:

முதலில் அவ்வளவாக உயிரித்தொழில்நுட்ப விளைபொருட்களுக்கு நெருக்கடி கொடுக்காத ஐரோப்பா விழித்துக்கொண்டு கடுமையான சட்டங்களை இயற்றியது. 80-களின் மத்தியில் ஐரோப்பிய யூனியனின் உயிரித்தொழில்நுட்ப முனைப்புக்குழு, 1984-ஆம் ஆண்டு உயிரித்தொழில்நுட்ப ஒழுங்காற்று சேவைக் குழுவை (BRIC) அமைத்தது. இதில், ஐரோப்பாவின் பல்வேறு அமைப்புகளான, சுற்றுச்சூழல் பொது இயக்குனரகம், நுகர்வோர் பாதுகாப்புக் குழுமை மற்றும் அணு பாதுகாப்பு போன்ற அமைப்புகள் அங்கத்தினர் ஆவார்கள்.
1990-களில் ஐரோப்பிய ஆய்வாராய்வுக்கழகம் சில முன்னெச்சரிக்கை விதிமுறைகளை கடைப்பிடித்தது. அதன்படி, மரபணு மாற்றம் செய்யப்பட்ட விளைபொருட்களை விற்பனை செய்யவேண்டுமெனில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அவை உறுப்பினர்களின் ஒப்புதல் இருக்க வேண்டும். அவர்களின் ஒப்புதல் இல்லையெனில், பொருட்கள் சந்தைப்படுத்தப்பட அனுமதி கிடையாது.

கடந்த 15 வருடங்களில், அமெரிக்காவை விட, ஐரோப்பாவில் கெடுபிடிகள் அதிகம். அதோடு, மக்களின் கருத்துக்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. தேவையெனில், மக்கள் கருத்தே பிரதானமாகவும் ஐரோப்பிய ஆய்வாராய்வுக்கழகத்தின் கருத்தை விடவும் முக்கியம் வாய்ந்ததாக கருதப்படவும் வழிவகை செய்தது. ஆனால், உயிரித்தொழில்நுட்ப விளைபொருட்கள் குறித்த இந்தியாவின் கருத்து முற்றிலும் தவறாகவும், ஜனநாயகத்தன்மை அற்றதாகவும் இருக்கிறது.

இந்தியாவில் உயிரித்தொழில்நுட்பம்:

இந்தியாவைப்பொறுத்தவரை, 1980-களுக்கு மேல்தான், உயிரித்தொழில்நுட்பத்துறை, இந்திய அரசால் நிறுவப்பட்டது. 2000 ஆம் ஆண்டு வரை நிதிஉதவியும் அளித்து வந்தது. 1990 க்கு மேல் எப்படி கல்வியும் ஆரோக்கியமும் தனியார்மயப்படுத்தப்பட்டதோ, அதேபோல், உயிரித்தொழில்நுட்பமும் தனியார்மயப்படுத்தப்பட்டது. விவசாயத்துறை அமைச்சகம், உயிரித்தொழில்நுட்ப ஆணையம் மூலமாக, M.S.சுவாமிநாதன் தலைமையில், சிறப்புக்கடமைப்படை (Task Force) ஒன்றை அமைத்தது. அதன்படி, சுற்றுச்சூழலை பாதுகாப்பது, விவசாயக்குடும்பங்களின் நலனில் அக்கறை கொள்வது, நீடித்த நிலைத்த விவசாய முறைகளை கடைப்பிடிப்பது, ஆரோக்கியம் மற்றும் உணவு குறித்த பாதுகாப்பு மற்றும் நாட்டின் உயிரிய பாதுகாப்பு பேணுவது என்பதாக அறிக்கையெல்லாம் வெளியிட்டது. ஆனால், 2008- ல் அவ்வறிக்கையை விஞ்ஞானத்தொழில்நுட்ப அமைச்சகம் காற்றில் பறக்க விட்டது.

புதிதாக, உயிரித்தொழில்நுட்ப ஒழுங்காற்று ஆணையம் (BRAI) தொடங்கப்பட்டது. அது வெளியிட்ட மசோதா மார்ச் 2010-ல் ரகசியமாக கசியத்தொடங்கியது. விரிவாக குறை கூறப்பட்டது. குறைகள் கடுமையான விமர்சனத்திற்க்குள்ளானது.

மசோதா குறிப்பிடும் விஷயம் என்னவெனில், மரபனுத்தொழில்நுட்பப்பயிர்கள் குறித்து விமர்சிக்கக்கூடாது என்றும், அவ்வாறு விமர்சிப்பவர்களுக்கு, தண்டனை வழங்குவதென்றும் கூறுகிறது. அதே ஆண்டிலேயே பொது மக்களின் விமர்சனத்திற்கும் ஆளானது. அதன் பிறகே, அம்மசோதா சுற்றுச்சூழல் அமைச்சகத்தினால் மறுபரிசீலனை செய்யப்பட்டது.
ஆகஸ்ட் 17, 2011-ல், உயிரித்தொழில்நுட்ப ஒழுங்காற்று ஆணையம் ஒரு மசோதாவை மக்களவையில் அறிமுகப்படுத்துவதாய் இருந்தது. என்ன காரணத்தினாலோ அறிமுகப்படுத்தப்படவில்லை. ஆனால், எந்த நேரமும் அறிமுகப்படுத்தப்படலாம் என்ற நிலை உள்ளது. ஏற்கனவே உள்ள மரபனுத்தொழில்நுட்ப அங்கீகாரக்குழு (GEAC) மற்றும் மரபணுமாற்ற மறுசீராய்வுக்குழு (RCGM) இவற்றினை அதிகாரம் செய்யக்கூடிய அமைப்பாக உயிரித்தொழில்நுட்ப ஒழுங்காற்று ஆணையம் உள்ளது. உயிரித்தொழில்நுட்பம் குறித்த எந்தவொரு திட்டத்தினையும் மத்திய அரசாங்கமே செயல்படுத்தும் என்றும் மாநிலங்கள் வேண்டுமானால் அல்லோசனைகள் கூறலாம் மக்கள் வாயைத்திறக்கக்கூடாது. என்று கூறுகிறது. . இது கார்டஜினா கோட்ப்பாட்டிற்கு எதிரானது. இந்தியாவும் அதில் கையெழுத்திட்ட ஒரு நாடு என்பதை மறக்கக்கூடாது.

உயிரித்தொழில்நுட்ப ஒழுங்காற்று ஆணைய மசோதா என்ன சொல்கிறதென்றால், மரபனுத்தொழில்நுட்பப்பயிர்கள் அல்லது விலங்குகள் குறித்த சாதக, பாதகங்களை யாராவது அறிவியலுக்குப்புறம்பாகவோ, ஆதாரமில்லாத கருத்துக்களை மக்கள் மத்தியில் பரப்பினால், ஆறு மாத சிறைத்தண்டனையும், இரண்டு லட்சம் அபராதத்தொகையோ அல்லது இவை இரண்டுமோ விதிக்கப்படும் என்றும், அரசாங்க அனுமதியின்றி, மரபணு மாற்றப்பயிர்களை அல்லது விலங்குகளை விளைவிக்கவோ அல்லது உருவாக்கவோ ஆராய்ச்சிகள் மேற்க்கொள்ளும்பட்சத்தில், இரண்டு ஆண்டு முதல் பத்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையோ அல்லது பத்து லட்சம் அபராதமோ அல்லது இவை இரண்டுமோ விதிக்கப்படும் என்று கூறுகிறது. இது இந்திய மக்களுக்கும், விஞ்ஞானிகளுக்கும் விரோதமானது என்று அனைத்து தரப்பினரும் குரல் கொடுக்க ஆரம்பித்துவிட்டர்கள்.

நாம் கேட்பதெல்லாம் இவை தான்:

1. ஏற்கனவே இருக்கும் உயிரித்தொழில்நுட்பம் குறித்த விதிமுறைகளை பலப்படுத்துவதை விட்டு விட்டு புதிதாக ஒரு அமைப்பின் மூலம் விதிமுறைகளை எர்ப்படுத்துவதின் அவசியம் என்ன?
2. உயிரித்தொழில்நுட்பத்தை வலுப்படுத்தும் அமைப்பிற்கும், ஒழுங்காற்றும் அமைப்பிற்கும் உள்ள குறைபாட்டை ஏன் உணர்ந்து கொள்ள மறுக்கிறார்கள்?
3. விவசாயம் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்த மாநிலங்களின் உரிமையை ஏன் பறிக்க வேண்டும?
4. இந்திய உயிரித்தொழில்நுட்ப ஒழுங்காற்று ஆணைய மசோதாவில் வெளிப்படைத்தன்மை இல்லையே ஏன்? உதாரணமாக, தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் நம்மால் எந்த தகவலையும் பெறமுடியாது.
5. மக்களுடனான விரிவான கலந்துரையாடல் நிகழ்த்தாமல் எதேச்சதிகாரப்போக்குடன் இந்த மசோதாவை பாராளுமன்றத்தில் அமல் செய்வதன் அவசியம் என்ன?

சமூக ஆர்வலர்கள், தேசநலன் குறித்த அக்கறையாளர்கள், விஞ்ஞானிகள், சமூக அமைப்புகள், விவசாய அமைப்புகள், தொழிற்ச்சங்கங்கள், நுகர்வோர் அமைப்புகள், அரசியல் கட்சிகள் என அனைவரிடமும் கலந்தாலோசித்த பிறகே இந்த மசோதாவை அமல்ப்படுத்த வேண்டும். அதுவரை அமல்படுத்தக்கூடாது.

No comments: